ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் குனு கிஷான். இவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குனு கிஷான் செய்த மேல்முறையீட்டில், அவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி குனு கிஷான் பாலியன் வன்கொடுமை செய்த சிறுமி காணாமல் போனதாக அவரின் குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பாதிக்கப்பட்ட பெண், அடையாளம் தெரியாத ஹெல்மெட் அணிந்த இரண்டு பேருடன் இருசக்கர வாகனத்தில் செல்வது சிசிடிவி கேமரா காட்சியில் தெரியவந்துள்ளது. மேலும், அந்த சிறுமி அவருடைய அத்தை வீடான ஜார்சுகுடா பகுதியில் தங்கி இருந்ததாக போலீசாருக்கு தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட சிறுமியை குனு கிஷான் தான் அழைத்துச் சென்றுள்ளதாக ஏஐ தொழில்நுட்பம் மூலம் போலீசார் கண்டுபிடித்தனர். அதன் பிறகு, குனு கிஷானை பிடித்து விசாரணை நடத்தியதில், சிறுமியை கொலை செய்துவிட்டு உடல் பாகங்களை இரண்டு இடங்களில் தூக்கி எறிந்ததாக அவர் ஒப்புக்கொண்டார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் மூலம், பிரமானி ஆற்றில் சிறுமியின் தலை மற்றும் உடல் பாகங்களை போலீசார் கண்டுபிடித்தனர்.
அதனை தொடர்ந்து, குனு கிஷானை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், குற்றவாளிக்கும் நீண்ட காலமாக பழக்கம் இருந்துள்ளது. இதனையடுத்து, அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குனு கிஷான் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டார். நீதிமன்ற விசாரணையில் தனக்கு எதிராக சாட்சி சொல்லிவிடுவாரோ என்ற பயத்தில் சிறுமியை கொலை செய்ய ஜாமீனில் வெளியே வந்ததிலிருந்து குனு கிஷான் திட்டமிட்டுள்ளார். அந்த திட்டம் யாருக்கும் தெரியாமல் இருக்க, இருசக்கர வாகனத்தின் எண்ணை மாற்றியுள்ளார். அதன் பிறகு, அந்த சிறுமியை தனது வாகனத்தில் அழைத்துச் சென்று, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. ஜாமீனில் வெளியே வந்த பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.