மறைந்த முன்னாள் குடியரசு தலைவர், இந்திய இளைஞர்களின் இதயத்தில் இடம்பிடித்த ஏ.பி.ஜெ அப்துல் கலாம் அவர்கள் 2015-ஆம் ஜூலை 27-ஆம் தேதி உயிரிழந்தார். தற்போது நேற்று அவரது மூன்றாம் ஆண்டு அனுசரிப்பு தினம் நாடுமுழுவதும் அனுசரிக்கப்பட்டது. அவர் உயிருடன் இருக்கும் பொழுது மாணவ மாணவிகளிடமும் இளைஞர்களிடமும் தனது கருத்துக்களை பரிமாறிக்கொள்ள @apjabdulkalam என்ற பெயரில் ட்விட்டர் பக்கத்தையும், பேஸ்புக் பக்கத்தையும் பயன்படுத்திவந்தார். அந்த கணக்கில் பலலட்சம் பேர் அவரை பின்தொடர்ந்து வந்தனர்.
ஆனால் அவரது இறப்பிற்கு பிறகு அவரது கணக்கு ''kalamcenter'' என்ற பெயருக்கு மாற்றப்பட்டு அதனை பின்தொடர்ந்து வந்துள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெயருக்கு கணக்கை மாற்றியவர் கலாமின் பகுதிநேர உதவியாளராக இருந்த ஸ்ரீஜன்பால் சிங் என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் இதுபோன்று கலாமின் பெயர்களில் நூற்றுக்கணக்கான அமைப்புகள் இயங்கிவருவதாகவும், அதில் ஒன்றுதான் ''கலாம்சென்டர்'' என்ற பெயரில் ஸ்ரீஜன்பால் இயக்கிவந்த அமைப்பு என்பதையும், இந்த அமைப்பின் மூலம் சட்டவிரோதமாக நன்கொடை வசூலிக்கப்பட்டதையும் கலாம் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவர்களது குடும்பசட்ட ஆலோசனை குழுவின் மூலம் தெரிந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து கலாமின் அண்ணன் முகமது முத்து மீரா மரைக்காயர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கலாமின் பொக்கிஷம் மிகுந்த அவரது சிந்தனைகள் அவரது ட்விட்டர், பேஸ்புக் பக்கங்களிலிருந்து திருடப்பட்டுள்ளது. பொக்கிஷமாக இருக்கும் அவரது டிஜிட்டல் சொத்துக்களை அவருடன் பணியாற்றியவர்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இதுதொடர்பாக ராணுவம், உள்துறை, தொழிநுட்பத்துத்துறை மந்திரிகளுக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது.
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் ட்விட்டர், பேஸ்புக் பக்கங்களில் தகவல் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது