“புடிச்சி ஜெயில்ல போடுங்க மேடம், சாக்லேட்ட திருடிட்டாங்க” என்று போலீஸ் ஸ்டேஷனில் தாய் மீது புகார் அளிக்கும் 3 வயது சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் மாவட்டம் அருகே டெத்தலை எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்த 3 வயது சிறுவன் ஒருவன், அவரது தாய் மீது புகார் அளித்துள்ளார். இதைக் கேட்டு வியப்படைந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் பிரியங்கா நாயக், சிரித்தபடியே அந்த சிறுவன் கூறுவதை கவனித்துக் கொண்டிருந்தார்.
என்ன நடந்தது என்றால், டெத்தலை கிராமத்தைச் சேர்ந்த தம்பதியின் 3 வயது மகன் சதாம், அடிக்கடி சாக்லேட்டுகள் சாப்பிடுவதாக தெரிகிறது. ஆனால், சதாமின் தாய் சாக்லேட்டுகளை சாப்பிடக்கூடாது என திட்டியதுடன் வீட்டிற்குள் இருந்த சாக்லேட்களை மறைத்தும் வைத்துள்ளார்.
என்னோட சாக்லேட்கள் வேண்டும் என்று பலமுறை கேட்டும் அவரது தாயார் அதனைக் கொடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த சிறுவன் தனது தந்தையிடம் வந்து தன்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார். தந்தையுடன் காவல் நிலையம் சென்ற சிறுவன், எனது தாய் என்னோட சாக்லேட்டுகளை திருடி, அதை மறைத்து வைத்துள்ளார். அவரை சிறையில் அடைக்க வேண்டும் என புகார் அளித்தார்.
இதனை எஸ்.ஐ சிரித்துக்கொண்டே போலியாக புகார் எழுதிக் கொண்டார். அதன் பிறகு, அந்தக் குழந்தையை சமாதானம் செய்த தந்தை, வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி குழந்தையின் அப்பாவித்தனமும், சிறுவனை போலீசார் கையாண்ட விதமும் இணையவாசிகளை அதிகளவில் கவர்ந்துள்ளது.