
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாகப் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றது. இதுதொடர்பாக காவல்துறையினரும், மத்திய போதைப் பொருள் தடுப்பு காவல்துறையினரும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாகப் பேருந்து, இரயில் நிலையங்களில் கடத்தப்பட்டு வந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு வந்தன. மேலும் துறைமுகங்கள் வழியாக அதிக அளவில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாகப் போதைப்பொருட்கள் தடுப்பு பிரிவுக்குத் தகவல் வந்த நிலையில் நாட்டில் உள்ள அனைத்து முக்கிய துறைமுகங்களிலும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக குஜராத் உள்ளிட்ட சில இடங்களில் அதிக அளவிலான போதைப்பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதற்கிடையே வடகிழக்கு மாநிலங்களிலும் தற்போது போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வந்தனர். இந்நிலையில் அஸ்ஸாம் திரிபுரா மாநில எல்லையில் லாரியில் கடத்தி வரப்பட்ட 2400 கிலோ எடையுள்ள கஞ்சாவை அதிகாரிகள் கைப்பற்றினர். இவ்வளவு பெரிய அளவில் முன்னெப்போதும் கஞ்சா பறிமுதல் செய்யப்படாத நிலையில் அதிகாரிகளை இந்த கடத்தல் சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.