டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யூ) அவ்வப்போது மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். இதற்கு முன்பு அங்கு ஏற்பட்ட மாணவர்கள் போராட்டம் பலமுறை கலவரத்திலும் முடிந்திருக்கிறது. இந்த நிலையில் பல்கலைக்கழகத்தில் போராடினால் 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடைமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக ஜேஎன்யூ பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கட்டிடங்களுக்கு 100 மீட்டருக்குள் மாணவர்கள் தர்ணா அல்லது சுவரொட்டிகளை ஒட்டினால் 20,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். தேச விரோத செயலில் மாணவர்கள் ஈடுபட்டால் பத்தாயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். வகுப்புவாத, சமூக மோதல் அல்லது தேச விரோத கருத்துக்களைக் கொண்ட சுவரொட்டிகள் அல்லது துண்டு பிரசுரங்களை பல்கலைக்கழகத்தில் ஒட்டுவதற்கு அனுமதி இல்லை.
உண்ணாவிரதம், தர்ணாவில் ஈடுபடும் மாணவருக்கு அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டு மாதங்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள். விடுதியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். படிக்கும் காலத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனைகள் பெறும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து முழுவதுமாக வெளியேற்றப்படுவர். மாணவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை விவரம் குறித்த நகல் பெற்றோர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் மற்றும் இணையத்திலும் பதிவேற்றப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகம் கருத்துரிமையை நொறுக்கும் வகையில் புதிய வழிமுறைகளை வகுத்துள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.