தமிழக எல்லை பகுதியிலிருந்து 70 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கொட்டிபுரலு என்ற இடத்தில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான வர்த்தக மையம் ஒன்றை இந்திய தொல்லியல் துறை கண்டறிந்துள்ளது.
திருப்பதி மற்றும் நெல்லூருக்கு அருகே அமைந்துள்ள இந்த கிராமத்தில் தொல்லியல் துறை ஆய்வு பணியை மேற்கொண்டு வந்தது. அப்போது இந்த ஆய்வில், செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட ஒரு கட்டிட அமைப்பு கண்டறியப்பட்டது. மேலும் அந்த அமைப்போடு, ஒரு விஷ்ணு சிலை, செம்பு மற்றும் காரீய நாணயங்கள், ஆயுதங்கள் ஆகியவையும் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த இடம் கடல்வழி வர்த்தகத்துடன் தொடர்புடைய ஒன்றாக இருந்திருக்கும் எனவும், இங்கு கடல் கடந்து வெளிநாடுகளுடன் வாணிபம் செய்யப்பட்டிருக்கும் எனவும் ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தையதாக கண்டறியப்பட்டுள்ள இந்த அமைப்பு குறித்து அடுத்தகட்ட ஆய்வுகள் நடைபெறும் போது, மேலும் பல புதிய தகவல்கள் கிடைக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இந்த பகுதியில் புவியியல், ரசாயன ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.