ஹரியானாவில் ஹிசார் மாவட்டத்தின் பலசாமத் கிராமத்தில் 70 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றில் 18 மாத குழந்தை ஒன்று மாட்டியுள்ளது. குறிப்பிட்ட அந்த கிராமத்தில் கட்டிட தொழிலாளிகளான ஒரு தம்பதியின் ஐந்தாவது மகனான நதீம் என்ற அந்த குழந்தை நேற்று மாலை 6 மணியளவில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துள்ளது.
இதுபற்றிய தேசிய பேரிடர் பொறுப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து மீட்பு படையினரும் ராணுவத்தினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு விரைந்துள்ள மருத்துவ குழுவினர் கிணற்றுக்குள் உள்ள குழந்தை சுவாசிக்க உதவும் வகையில் பிராணவாயு குழாய்களை உள்ளே செலுத்தியுள்ளனர். குழந்தையை வெளி எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சம்பவம் நடந்ததிலிருந்து அக்குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அழுதபடி அதே இடத்தில காத்துள்ளனர். குழந்தை கிணற்றுக்குள் விழுந்த இந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.