சென்னை வர்த்தக மையத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024’ - ஐ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் (07-01-2024) தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் இலக்கினை எட்டுவதற்கான செயல்திட்ட அறிக்கையை வெளியிட்டார். இந்த மாநாட்டில் பல்வேறு முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் தொழில் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்டன். மேலும், இந்நிகழ்வில் செமி கண்டக்டர் கொள்கைகள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெயரில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலமாக, ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 803 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 2 லட்சத்து 80 ஆயிரத்து 600 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டது. நான் ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, 17 ஆயிரத்து 371 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துகிற வகையில், 7 ஆயிரத்து 441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை பெற்றோம். அதோடு, நான் தொடர்ந்து இந்த முதலீடுகள் செயல்வடிவம் பெறுவதைக் கண்காணிப்பேன்.
அந்த வகையில், ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். 27 தொழிற்சாலைகள் திறந்து வைத்திருக்கிறேன். இது மூலமாக 74 ஆயிரத்து 757 இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையோடு சொல்கிறேன், இந்த மாநாடு தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலாக அமையும். தமிழ்நாட்டின் வரலாற்றில் நிச்சயம் இது நினைவுகூரப்படும். இந்த மாநாட்டினுடைய தனித்துவமும் புதுமைத்துவமும் என்றென்றும் பேசப்படும். நான் அதிகாரிகளுக்கு ஆரம்பத்திலேயே ஒரு அன்புக்கட்டளை இட்டேன். உலக அளவில் முதலீட்டுக்கான சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை முன்னேற்ற வேண்டும். இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதற்கான முக்கியக் காரணமாக அதுதான் இருக்க வேண்டும் என்று தெரிவித்தேன்.
அரசின் அயராத உழைப்பு மற்றும் முதலீட்டாளர்களின் பங்களிப்பு காரணமாக, இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, இறுதி செய்யப்பட்ட மொத்த முதலீடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவாக, 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் என்பதை, இந்தியாவே உற்றுநோக்கும் இந்த அவையில் பெரும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். இந்த முதலீடுகள் மூலம், நேரடி வேலைவாய்ப்பு என்ற வகையில், 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 நபர்களுக்கும், மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில், 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 நபர்களுக்கும் என மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மேம்பட்ட மின்னணுவியல் உற்பத்தி, பசுமை எரிசக்தி, தோல் அல்லாத காலணிகள், வாகனங்கள் மற்றும் மின் வாகனங்கள், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, தரவு மையங்கள், திறன்மிகு மையங்கள் தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்ற பலதரப்பட்ட துறைகள் மூலமாக இந்த முதலீடுகள் வந்திருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளப்பதிவில், “தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட ‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு - 2024’ -ஐ இந்தியாவே வியக்க வெற்றிகரமாக நடத்திக்காட்டிய தொழில்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இந்த இரண்டு நாள் மாநாடு 20 ஆயிரம் தொழில்துறைப் பிரதிநிதிகள் பங்கேற்புடனும், 39 லட்சம் மாணவர்கள் பார்வையிடவும் பல புதுமைகளோடு தமிழ்ப் பண்பாட்டின் பெருமிதங்களைப் பறைசாற்றி நடந்தேறியுள்ளது.
திராவிட மாடல் அரசு அமைந்தபிறகு இளைஞர்களும், மகளிரும் உயரும் திட்டங்களையும் செயல்களையும் செயல்படுத்தி வருகிறோம். அதில் மிகப்பெரிய பாய்ச்சல்தான், இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு. 'எல்லோருக்கும் எல்லாம்','எல்லா மாவட்டங்களுக்குமான பரவலான வளர்ச்சி' என்ற நமது பயணத்தில் இது முக்கிய மைல்கல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.