தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு எதிராக திரண்டு அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி, முதல்வர், காவல்நிலையம் வரை சென்றிருப்போர் எல்லாம் கடந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷாலுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தவர்கள். விஷாலின் ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக திரண்டு ஏன்?
கடந்த முறை பதவி வகித்து வந்த கலைப்புலி எஸ்.தாணுவிற்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி அவரை எதிர்த்து போட்டியிட்ட விஷாலுக்கு பெரிய ஆதரவு இருந்தது. கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் வெற்றியும் பெற்று தலைவர் ஆனார். அதன் பின்னர் விஷாலுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் சிலர் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறிவந்தனர்.
இந்நிலையில், விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர்களில் ஒரு பகுதியினர் போர்க்கொடி தூக்க தொடங்கினார்கள். பெரிய பட்ஜெட் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு மட்டும் ஆதரவாக விஷால் பாரபட்சமாக செயல்படுகிறார். தயாரிப்பாளர் சங்கத்துக்கு என்று வைப்புநிதியாக 7.85 கோடி ரூபாய் இருந்தது. அந்த 7.85 கோடி ரூபாய்க்கு கணக்கு கேட்டால் இதுவரையில் பதில் இல்லை. தயாரிப்பாளர் சங்க வங்கிக்கணக்கில் வெளிப்படைத்தன்மை இல்லை.தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு விஷால் வருவதே இல்லை. தமிழ் ராக்கர்ஸில் விஷாலுக்கு பங்கு உள்ளது என்றும், கிரிமினல் செயல்களில் அவர் ஈடுபடுகிறார். சங்க நிர்வாகிகள் 150 பேரை நீக்கியிருக்கிறார். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு என்று பதிவுத்துறை அலுவலகம் ஒன்று உண்டு. ஆனால், விஷால் தலைவராகப் பொறுப்பேற்றதும் புதிதாக ஒரு கட்டடம் வாடகைக்கு எடுக்கப்பட்டு அலுவலகம் அங்கே நடைபெறுகிறது. இதற்கு முன்பாக நடந்த பொதுக்குழுவில் கேள்வி கேட்டதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. இரண்டு வருடங்கள் ஆகியும் பொதுக்குழுவை கூட்டவில்லை என்று விஷால் மீது அவர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தனர்.
நேற்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஏ.எல். அழகப்பன், டி.சிவா, எஸ்.ராதாகிருஷ்ணன், எஸ்.வி.சேகர், நந்தகோபால், மைக்கேல் ராயப்பன், தனஞ்செயன் உள்பட சுமார் 50 பேர் திரண்டனர். அவர்கள் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர். இதையடுத்து, தயாரிப்பாளரும் இயக்குநருமான பாரதிராஜா தலைமையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது திரைத்துறை தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் முன் வைத்து, தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு நடப்பதாக கூறி சங்கத்தேர்தலை 4 மாதத்தில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முதல்வரிடம் முன் வைத்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாரதிராஜா, தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடந்து புதிய நிர்வாகிகள் பதவியேற்ற பின்னர் விதிமுறையை மீறி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தயாரிப்பாளர் சங்கத்தில் கூட்டங்கள் நடத்தாமல், தனியாக ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து அதற்கு தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து வாடகை கொடுக்கப்படுகிறது. அறக்கட்ட ளையில் 7 கோடி ரூபாய் என்ன ஆனது என்ற கேள்விக்கு சரியான பதில் இல்லை. கணக்கு வழக்குகளும் சரியில்லை. இது குறித்து பதில்கள் கிடைக்காததால் சங்க கட்டிடத்திற்கு பூட்டுப்போட வேண்டிய நிலை ஏற்பட்டது. சாவியை பதிவாளரிடம் கொடுத்த போது அதை வாங்க தனக்கு அதிகாரம் இல்லை என்று கூறிவிட்டார். இதுபற்றியெல்லாம் முதலமைச்சரிடம் முறையிட்டோம். எங்கள் கோரிக்கைகளை கேட்ட அவர், அதிகாரிகளை அழைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவதாக கூறியிருக்கிறார்’’என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், விஷால் சார்பில் சங்கத்திற்கு பூட்டு போட்டது குறித்து பாண்டிபஜார் காவல்நிலையத்தில் புகார் கூறப்பட்டது. புகார் குறித்த விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில், இன்று காலையில் விஷால் தனது ஆதரவாளர்களூடன் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தின் பூட்டை உடைக்க முயன்றார். இதனால் விஷால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். சட்டவிரோதமாக கூடுதல், பிரச்சனைக்குரிய சொத்துகள் குறித்து தகராறில் ஈடுபட்டு அமைதியை குலைத்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் விஷால் மீது சென்னை பாண்டிபஜார் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் மாலையில் விஷால் விடுவிக்கப்பட்டார்.
தயாரிப்பாளர் சங்க விவகாரம் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டே போன நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் இன்று இரவு சீல் வைத்தனர். கிண்டி வட்டாட்சியர் ராம்குமார் தலைமையில் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது. விஷால் மற்றும் அவரை எதிர்க்கும் அணியினரை அழைத்துப்பேசி தீர்வுகாணும் வரை அலுவலகம் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்க பிரச்சனை தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.