Rahul Gandhi in support of farmers protest

மத்திய அரசு சார்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியான விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கக் கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த சூழலில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது.

Advertisment

அதன்படி கடந்த 12 ஆம் தேதி (12.02.2024) மாலை சண்டிகரில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இதனால் விவசாயிகள் திட்டமிட்டபடி, பஞ்சாப்பில் இருந்து தங்கள் டிராக்டர்கள் மூலம் ‘டெல்லி சலோ’ என்ற பேரணியை நேற்று முன்தினம் (13.02.2024) பதேகர் சாஹிப் பகுதியில் இருந்து தொடங்கி, சம்பு எல்லை வழியாக டெல்லியை நோக்கி பேரணியைத் தொடங்கினர்.

Advertisment

அதே சமயம் டெல்லி எல்லைகளில் விவசாயிகளைத் தடுப்பதற்காகத் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். விவசாயிகளின் போராட்டத்தை தடுக்கும் வகையில் மார்ச் 12 ஆம் தேதி வரை டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் டெல்லி - பஞ்சாப் எல்லையில் பேரணி சென்ற விவசாயிகள் மீது ட்ரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் டெல்லி எல்லையே புகை மண்டலமாக மாறியது. மேலும், போலீசார் விவசாயிகள் மீது தடியடி நடத்தியதில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் காயமடைந்தனர். இருப்பினும், அங்கு விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பேரணியில் காயமடைந்த விவசாயியான குர்மீத் சிங் என்பவரிடம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொலைப்பேசி வாயிலாக பேசி ஆறுதல் கூறினார். அதில் பேசிய ராகுல் காந்தி, ‘இது முற்றிலும் தவறு. உங்களுடன் நாங்கள் இருக்கிறோம். கவலைப்படாதீர்கள். நாட்டுக்கு எது முக்கியமோ அந்த விஷயத்திற்காக போராடுகிறீர்கள். முன்பு நாட்டுக்காக பணியாற்றினீர்கள். இப்போது அதனை நன்றாக செய்து வருகிறீர்கள். வாழ்த்துக்கள்’ என்று கூறினார்.

Advertisment