துவைக்காத சாக்ஸ்களோடு வரும் பார்வையாளர்களும், பரவலாகக் கிடக்கும் பாசிகளுமே தாஜ்மகாலின் நிறம் மாற்றத்திற்குக் காரணம் என இந்தியத் தொல்லியல் துறை உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.
![tajmahal](http://image.nakkheeran.in/cdn/farfuture/kwglzETEy8PnOtA-bzXGSORvS0kjsLvcYj5mEr6ctAQ/1533347634/sites/default/files/inline-images/Tajmahal.jpg)
உலக அதிசயங்களில் ஒன்றாகவும், காதல் சின்னமாகவும் இருப்பது தாஜ்மகால். இதனை நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான உள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பார்வையிட வருகின்றனர். இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றான தாஜ்மகால் அதன் பிரிஸ்டைன் வெள்ளை நிறத்தில் இருந்து மாறி மஞ்சள், பழுப்பு மற்றும் பச்சை நிறத்திற்கு மாறி வருவதாகவும், தாஜ்மகாலில் மேலும் பல்வேறு பிரச்சனைகள் கண்டுகொள்ளப் படுவதில்லை என்றும் வழக்கறிஞர் மேக்தா என்பவர் மே 1ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் தீபக் மிஷ்ரா மற்றும் லோக்குர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து பதிலளிக்குமாறு இந்திய தொல்லியல் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்ட நிலையில், தாஜ்மகாலைப் பார்வையிட வருபவர்கள் துவைக்காத சாக்ஸ்களை அணிந்துவருவதும், பரவலாகக் கிடக்கும் பாசிகளுமே அதன் நிறம்மாற்றத்திற்குக் காரணம் என பதிலளித்தது.
தொல்லியல் துறையின் இந்த பதிலால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், ‘பிரச்சனை பாசிகளால் ஏற்படவில்லை. பாசிகள் காரணம் என்றால், தாஜ்மகாலின் மேற்பகுதியிலும் எப்படி நிறம் மாறியிருக்கும்? ஒரு நினைவுச் சின்னத்தை முறையாக பராமரிக்கத் தவறியதை தொல்லியல் துறை ஏற்க மறுப்பதுதான் அதற்குக் காரணம். தொல்லியல் துறை தங்களது பணியை முறையாக செய்திருந்தால் பிரச்சனையே வந்திருக்காது’ எனக்கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.