அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடராது என்கிற முடிவுக்கு வந்து விட்டாராம் தேமுதிக பொருளாளரும், விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா. நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிகவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அக்கட்சியை உதாசீனப்படுத்தியே வருகிறது அதிமுக தலைமை! கூட்டணி கட்சி என்கிற முறையில் தேமுதிக வைக்கும் கோரிக்கைகள், சிபாரிசுகள், யோசனைகள் என எதையுமே எடப்பாடி ஏற்பதில்லை.
சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையிலும் கூட்டணி கட்சி என்கிற மரியாதை தேமுதிகவுக்கு கிடைக்கவில்லை. இதனால், கூட்டணியில் இருக்கிறோமா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்வதற்காக, எடப்பாடியை சந்தித்துப் பேச தனது மகன் விஜய பிரபாகரனை அனுப்ப திட்டமிட்டிருந்திருக்கிறார் பிரேமலதா. இதனையடுத்து, ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரிடமும் அப்பாயிண்ட்மெண்ட் வாங்க பிரேமலதா தரப்பில் முயற்சிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பாயின்ட்மெண்ட் தரப்படவில்லை. இதனால் கூட்டணி உறவு தொடராது என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார் பிரேமலதா என்கிறது தேமுதிக தலைமையக வட்டாரம்.
கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் தங்களை இணைய வைத்தது பாஜகதான் என்பதால், பாஜகவின் முடிவு என்ன என்று தெரிந்த பிறகு அதிமுக கூட்டணி விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கலாம் என திட்டமிட்டுள்ளாராம் பிரேமலதா. பாஜகவும் தங்களை கைவிட்டுவிட்டால் தேமுதிக தலைமையில் மூன்றாவது அணியை கட்டமைக்கும் யோசனையை மாநில நிர்வாகிகளிடம் விவாதித்துள்ளார் பிரேமலதா.