தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘புயல் மழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தொழிற்பேட்டையில் உள்ள 4,800 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகமாகப் பாதிப்படைந்துள்ளன. மூலப்பொருட்கள், உற்பத்தியான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதால் தொழில் நிறுவனங்கள் முழுவதும் செயல்பட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால், சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் மீண்டும் முழுமையாக உற்பத்தியைத் தொடங்க சிறிது காலம் தேவைப்படும். அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குக் கடன் திருப்பி செலுத்தும் காலத்தை மாற்றி அமைக்க வேண்டும். அந்த நிறுவனங்களுக்குக் கூடுதல் மிகைப்பற்று வசதியை வழங்க வேண்டும்.
மேலும், கூடுதல் மூலதனக் கடன் மற்றும் கடன்களைத் திரும்ப செலுத்தும் காலத்தை நீட்டித்தல் உள்ளிட்ட முக்கிய உதவிகளை அந்த நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். கூடுதல் நடைமுறை மூலதனக் கடன் வழங்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை அறிவுறுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகளால் புயலால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக மீண்டெழ உறுதுணையாக அமையும்’ என்று தெரிவித்துள்ளார்.