இந்தியா போன்ற நாடுகளில் பாலியல் வன்கொடுமைகள் நடப்பது சகஜம்தான் என மத்திய இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் கத்துவாவைச் சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டது மற்றும் உன்னாவ் பகுதியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வால் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கங்வார், ‘பாலியல் வன்கொடுமைகள் நடப்பது துரதிஷ்டவசமானது. ஆனால், சில சமயங்களில் நம்மால் அதைத் தடுத்து நிறுத்தமுடியாது. அரசு இந்த விஷயத்தில் விழிப்புடன் செயல்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்வது யாவரும் அறிந்ததே’ என்றார். மேலும், ‘இந்தியா போன்ற ஒரு மிகப்பெரிய நாட்டில் ஒன்றிரண்டு பாலியல் குற்றங்கள் நடக்கலாம். அதையெல்லாம் பெரிதுபடுத்திப் பேசி பரபரப்பை ஏற்படுத்தக்கூடாது. என்ன நடவடிக்கை தேவையோ அதை அரசு முறையாக மேற்கொள்ளும்’ என சர்ச்சைக்குரிய விதமாக பேசினார்.
மத்திய அமைச்சரின் இந்தக் கருத்து சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், ‘பாலியல் குற்றங்கள் மிகமுக்கியமான பிரச்சனையாக இருக்கும் சூழலில், அதை பொறுப்புடன் கையாளவேண்டும் என்று சொன்னதே தவறாக புரிந்துகொள்ளப்பட்டது’ என விளக்கமளித்துள்ளார்.