நக்கீரன் இதழில் திருச்சியில் பல இடங்களில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக வெளியிடப்பட்ட செய்தியை தொடர்ந்து திருச்சி மாநகர ஆணையர் லோகநாதன் பல இடங்களில் சோதனை நடத்தி கட்டுக்குள் கொண்டுவந்தார். ஆனால் மீண்டும் இந்த மசாஜ் சென்டா் மூலம் விபச்சாரம் செய்யும் கலாச்சாரம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.
திருச்சி மாநகரில் மசாஜ் சென்டர்ஸ் என்கிற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக காவல்துறையினருக்கு தொடர் புகார் வந்தது. அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் கடந்த ஒரு மாதத்தில், பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்ட பெண்கள் மீட்கப்பட்டு, அரசு காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஒருசில மாதங்கள் கட்டுக்குள் இருந்த இந்த மசாஜ் சென்டா் விபச்சார தொழில் மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. மீண்டும் இதுக்குறித்த புகார்கள் அதிகளவில் வந்ததையடுத்து திருச்சி தில்லை நகர், உறையூர், கே.கே.நகர் கன்டோன்மென்ட் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 5 ஸ்பா சென்டர்களில் தனிப்படை போலீசார் புதன்கிழமை திடீர் சோதனை நடத்தினார்.
இதில், திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள நட்சத்திர விடுதியின் மாடியில் அமைந்துள்ள Sun Spa என்ற மசாஜ் சென்டரில் சோதனை செய்தபோது, அங்கு பெண்களை வைத்து விபச்சாரம் செய்தது உறுதியானது.
மேலும், ஸ்பா சென்டரில் நடத்திய சோதனையின் போது, அங்கு திருப்பூரை சேர்ந்த டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா உட்பட பல பெண்கள் இருந்தது கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
திருச்சி மாநகர விபச்சார தடுப்பு பிரிவு காவல் துறையினர் டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா உட்பட 13 பெண்களை மீட்டனர். மேலும், பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியதாக ஸ்பா உரிமையாளர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் அனைவருக்கும் திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.