
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சாத்தியக்கூறு இல்லை என தெரிவிக்கும் மத்திய அமைச்சர் நீதின் கட்கரியை சந்திக்க வலியுறுத்துகின்றனர். அவரை பார்ப்பதில் என்ன பயன்? காவிரி விவகாரத்தில் பிரதமர் எங்களை சந்திக்க மறுப்பது மாபெரும் அவமானம் என்று கூறினார்.
இந்நிலையில் தமிழக தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்க மறுப்பதாக வெளியான தகவல் வேகமாக பரவிய நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரியில் தமிழகத்தின் உரிமையை பெற உண்ணாவிரதம் மேற்கொண்டவர் ஜெயலலிதா. காவிரிக்காக கருத்து வேறுபாடுகளை மறந்து, அனைத்துக்கட்சி கூடி தீர்மானம் நிறைவேற்றினோம். பின்னர் முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. ஒருமித்த கருத்தோடு பயணிக்கவே, எதிர்கட்சித் தலைவரை அழைத்து முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
பிரதமரை சந்திக்க தொடர்ந்து அழுத்தம் தரப்பட்டு வருகிறது. ஆனால், முதலமைச்சர் தலைமையிலான குழுவை சந்திக்க பிரதமர் மறுக்கவில்லை. முதலில் நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த பிறகு சந்திக்கலாம் என பிரதமர் கூறியிருக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வாரம் உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்த நிலையில் 2 வாரங்கள் தான் முடிந்துள்ளது இன்னும் 4 வாரங்கள் உள்ளது. அதற்குள் அவசரப்பட்டு எந்த நிலைப்பாடும் எடுக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.