
சாதி பெயர்களில் உணவகங்கள் இருப்பது தவறில்லை என்றும் கடைகளுக்கு விரும்பிய பெயர்களை சூட்டுவதற்கு உரிமையாளர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் உரிமை வழங்கியுள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ கிருஷ்ண அய்யர் பாரம்பரிய பிராமணாள் கபே என்ற பெயரில் செயல்பட்டு வரும் உணவகத்தின் பெயர் பலகையை அகற்றக்கோரி பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 2012ல் போராட்டம் மேற்கொண்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டதாக 112 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்துசெய்யக்கோரி 112 பேரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கடைகளுக்கு தாங்கள் விரும்பும் பெயர்களை சூட்டுவதற்கு உரிமையாளர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் 19(1) (ஏ) மற்றும் 19 (1) (ஜி) பிரிவு உரிமை வழங்கியுள்ளது. அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள இந்த உரிமையில் தலையிட முடியாது.
இந்த உரிமையின் அடிப்படையில் கடையின் உரிமையாளர் தனது ஓட்டலுக்கு ஸ்ரீ கிருஷ்ண அய்யர் பாரம்பரிய பிராமணாள் கபே என பெயர் சூட்டியுள்ளார். சம்பந்தப்பட்ட கடைகளில் தீண்டாமை பின்பற்றப்பட்டால், குறிப்பிட்ட சாதியினர் மட்டும் அனுமதிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடலாம். ஆனால். இந்த உணவகத்தில் அவ்வாறு இல்லை. சாதிகளை குறிப்பிடும் வகையில் பல உணவகங்கள் உள்ளன.

மனுதாரர்கள் பெரியாரின் கொள்கை மீதான பற்றுதலால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் நடைபெற்று ஐந்தரை ஆண்டுகளுக்கு மேலாகிறது. மனுதாரர்கள் வன்முறையில் இறங்கவில்லை. இதனால் இந்த வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டியதில்லை. வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.