














விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 5 நாள் காவல் முடிந்த நிலையில் இன்று நிர்மலா தேவியை சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நிர்மலாதேவியை மே 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர் போலீஸ் வாகனத்தில் ஏற்ற நிர்மலா தேவியை போலீசார் அழைத்து வந்தனர். பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுக்க குவிந்தனர். போலீசார் நீதிமன்றத்தில் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் நிர்மலா தேவியை படம் எடுக்க முடியாதபடி அவரை மறைந்து மகளிர் போலீசார் நின்றனர். போலீசார் மஞ்சள் கயிரை கையில் வைத்து யாரையும் நெருங்க விடவில்லை.
அப்போது போலீசாருடன் பத்திரிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கிழிஞ்ச டிக்கெட்டுக்கு என்ன இவ்வளவு பாதுகாப்பு, மாணவிகளை சீரழித்ததை அவரே ஒப்புக்கொண்ட பின்னர் படம் எடுக்க தடுப்பது ஏன், படம் எடுக்க விடாதீர்கள் என்று சிபிசிஐடி போலீசாருக்கு கவர்னர் உத்தரவிட்டாரா என சரமாரியாக அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர். இதையடுத்து போலீசார், படம் எடுங்க சார், நாங்க மறைக்கல என ஒதுங்கினர். இந்த சம்பவத்தால் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதே வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் நேற்று சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இன்று அவரை சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.