சிலை கடத்தலின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சஞ்சீவி அசோகனை 22 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலிசார்.
நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகேயுள்ள அத்தாளநல்லூர் மூன்றீஸ்வரமுடையார் கோயிலில் துவார பாலகர் சிலைகள் கடந்த 1995 ம் ஆண்டு திருடுபோனது. வீரவநல்லூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பல்வேறு கட்ட விசாரணைக்குப்பிறகு கண்டுபிடிக்கமுடியாத வழக்காக மாறியது.
இந்தநிலையில் தமிழகம் முழுவதும் சிலைகள் திருடுபோன கோயில்களை ஆய்வு செய்து சிலைகடத்தல் குற்றவாளிகளை கைது செய்துவருகின்றனர் ஐ,ஜி பொன்,மாணிக்கவேல் தலைமையிலான போலிசார். அந்த வகையில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான திருவனந்தபுரத்தை பூர்வீகமாக கொண்ட சஞ்சீவி அசோகனை சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
அவரை இன்று கும்பகோணம் 1-ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சரவணபவன் முன்னிலையில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலிசாரிடம் விசாரித்தோம்,"
வீரவநல்லூர் அந்தாளநல்லூர் கோயிலில் திருடுபோன துவார பாலகர் சிலைகள் இரண்டையும் தஞ்சையைச்சேர்ந்த சீத்தாராமையா மும்பையில் உள்ள இந்தோ- நேபாள் ஆர்ட் கேலரியின் உரிமையாளர்களான வல்லபபிரகாஷ்,அவரது மகன் சூரியபிரகாஷ் ஆகியோரின் உதவியோடு பழுதுநீக்கம் செய்தவற்காக லண்டன் சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியா எடுத்துச்சென்றுள்ளார்கள்.
தற்போது அங்குள்ள நேஷனல் கேலரி ஆப் ஆஸ்திரேலியாவில் இருக்கிறது என தெரியவந்துள்ளது.
இரண்டு சிலைகள் மட்டுமின்றி மேலும் ரூ. 60 கோடி மதிப்பிலான 8 சிலைகள் ஆஸ்திரேலியா ஆர்ட் கேலரியில் இருக்கிறது. அவைகள் அத்தனையையும் மீட்கும் முயற்சியில் உள்ளோம். இதுகுறித்து ஆஸ்திரேலிய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். இதேபோல ஏற்கெனவே ஆஸ்திரேலியாவிலிருந்து இதுபோல மேலும் ரூ. 46 கோடி மதிப்புள்ள சிலைகள், சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூரின் மேடிசன் ஆர்ட் கேலரியிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறது. அது போல் மீட்போம் ," என்றனர்.
இந்த வழக்குத் தொடர்பாக மகாபலிபுரம் பகுதியைச் சேர்ந்த நச்சு (எ) லெட்சுமிநரசிம்மன், சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஊமைத்துரை, மற்றும் அவரது தம்பி அண்ணாதுரை, மும்பையைச் சேர்ந்த வல்லபபிரகாஷ், அவரது மகன் ஆதித்யபிரகாஷ், சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூர் என பெரும் சிலைகடத்தல் மன்னன்களை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.