கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால், முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். எனவே அன்றைய தினம் திட்டமிட்டபடி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுமா? அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்று அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்தது.
ஆட்சி மாற்றம் வரும் என்று பல தரப்பும் அழுத்தமாக நம்பும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பும் அதிமுகவுக்கு சாதகமான ஒரு ரிப்போர்ட்டை வைத்துள்ளது.
ரிசல்ட் பற்றி பல கணிப்புகள் ஓடினாலும் திமுக தரப்பில் கான்ஃபிடன்ட்டாக இருக்கிறார்கள். தேர்தல் முடிந்தபிறகு கொடைக்கானலில் ஓய்வெடுத்தபடியே ஸ்டாலின் சில ஆலோசனைகளை நடத்தியிருக்கிறார். சென்னை வந்த பின்னரும் சில ஆலோசனைகளை நடத்தியிருக்கிறார்.
கோட்டை அதிகாரிகள் தரப்பிலிருந்தே திமுக தலைமையைத் தொடர்புகொண்டு, “எந்த இடத்தில் பதவியேற்பு விழாவை வச்சிக்கலாம்? யார் யாரை அழைக்கலாம்? எந்தெந்த மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கலாம் என்ற பட்டியல் இருக்கிறதா?” என கேட்கிறார்களாம்.
அதற்கு ஸ்டாலின், "இப்பவே அவசரப்பட வேண்டாம்... ரிசல்ட் வரட்டும். திமுக ஜெயித்து பதவியேற்பு விழா நடக்கும்போது, கரோனா பரவலைப் பொறுத்து எளிமையாக நடத்துவதா? பல மாநில முதல்வர்களையும் அழைத்து பிரம்மாண்டமாக நடத்துவதா? என முடிவெடுக்கலாம்” என்று சொல்லியிருக்கிறாராம். அதேசமயம், திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் இப்பவே பதவியேற்பு பற்றி தீவிரமாக விவாதிச்சிக்கிட்டுதான் இருக்கிறார்கள்.