Published on 16/05/2018 | Edited on 16/05/2018

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்தே தீர்வது என பாஜகவின் தலைமை அமைப்பான ஆர்.எஸ்.எஸ் முடிவு செய்துள்ளது.
இதை செயல்படுத்த பாஜக தலைவரான அமித்ஷாவுக்கு கட்டளையிட்டுள்ளது. அதன்படி இன்று அமித்ஷா பெங்களூருக்கு வருகை தந்து முகாமிட உள்ளார். அதேபோல், பிரகாஷ் ஜவடேகர், அனந்த குமார், ரவிசங்கர் பிரசாத். மேலும் உத்தரபிரதேசம், ராஜஸ்தான் பகுதியில் உள்ள பாஜக முக்கிய நிர்வாகிகள் பெரும் தொழிலதிபர்கள் குழுவாக வந்து பெங்களூரில் முகாமிட்டுள்ளார்கள். இவர்களது திட்டம் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுப்பது என்பது தான்.
இந்தியாவில் காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை காவிமயம் என்ற கொள்கையை முன்னெடுத்துள்ள பாஜக இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளை தன் வசமாக ஆக்கி கொண்டது. ஆனால் தென்பகுதியான ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தான் தனது ஆட்சி அதிகாரத்தை நிறுவ முடியாமல் உள்ளது.
இந்நிலையில், ஏற்கனவே கர்நாடகாவில் சில மாதங்கள் ஆட்சியில் இருந்த பாஜக அதை பயன்படுத்தி முதலில் கர்நாடகாவில் நுழைந்தது அதன் பிறகு மற்ற மாநிலங்களில் கோலோச்சுவது என்பது தான் அவர்களது திட்டம். ஆனால் அத்திட்டம் தேர்தல் முடிவுகளால் உடைப்பட்டு போனது.
இதை பொருத்துக் கொள்ள முடியாத பாஜக எந்த நிலைக்கு வேண்டுமானாலும் சென்று கர்நாடகாவில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் செயல்படும். இதற்காக தான் அமித்ஷா முதல் ஏராளமான பாஜக புள்ளிகள் கர்நாடகத்தில் முகாமிட்டுள்ளனர். இவர்களின் கணக்கு 10 முதல் 15 எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் கொண்டு வருவது என்பது தான்.