கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐந்தாண்டு ஆட்சிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், அம்மாநில சட்டசபைக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சி நடத்திவருகிறது. சித்தராமையா முதல்வர் பதவி வகித்து வருகிறார். இந்த மாநிலத்திற்கான சட்டசபைத் தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறலாம் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைமை தேர்தல் அதிகாரி ஓ.பி.ராவத் கர்நாடக சென்று, அங்குள்ள மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, இன்று காலை கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலுக்கான தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதன்படி, கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற மே 12ஆம் தேதி நடத்தப்பட்டு, வருகிற மே 15ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும். இந்தத் தேர்தலுக்கு வருகிற ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 24ஆம் தேதி வரை வேட்புமனுத்தாக்கல் நடைபெறும். ஏப்ரல் 25ஆம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறும். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 27ஆம் தேதி வேட்புமனுவைத் திரும்பப்பெற கடைசிநாளாகும்.
சட்டசபைத் தேர்தலுக்கான தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு நடத்தை விதிகள் அமலுக்கு வரவுள்ளது.