வருமான வரித்துறை அலுவலகத்தில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் விசாரணைக்காக ஆஜரானார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிகில் பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் குழுமத்துக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதேபோல் நடிகர் விஜய், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூபாய் 77 கோடி பணமும், முக்கிய சொத்து ஆவணங்ககளும் கைப்பற்றப்பட்டன. மேலும் ரூபாய் 300 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அன்புச்செழியனுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது. இதையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அன்புச்செழியன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
ஏற்கனவே விஜயின் ஆடிட்டர், அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.