நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச முயற்சி நடப்பதுபோன்று, என் மீது பாஜக சாயம் பூச முயற்சி நடக்கிறது. என்னை பாஜக உறுப்பினராக நிறுவ முயற்சி நடக்கிறது. வள்ளுவரும் மாட்டமாட்டார், நானும் மாட்ட மாட்டேன். பாஜகவில் சேரவோ, கட்சியில் சேர்ந்து தலைவர் ஆக வேண்டும் என்றோ எனக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை என்றார்.
தன் மீது பாஜக சாயம் பூச முயற்சி நடக்கிறது என்று அவர் சொன்னது அரசியல் வட்டாரத்திலும், அரசியல் பார்வையாளர்கள் மத்தியிலும் பெரும் விவாதமாக எழுந்தது.
பின்னர் மீண்டும் போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், நான் எப்போதும் வெளிப்படையாகத்தான் பேசுவேன். தமிழகத்தில் சரியான ஆளுமைக்கான வெற்றிடம் உள்ளது. அரசியல் கட்சி தொடங்கும் வரை தொடர்ந்து நடிப்பேன். அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் மக்கள் அமைதி காக்க வேண்டும். எம்ஜிஆர் கூட அரசியல் கட்சி தொடங்கி முதல்வராகும் வரை நடித்தார். குறிப்பிட்ட சிலர் மட்டுமே எனக்கு காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள். இது அரசியலில் சகஜம் என்றார்.