நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி தூப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயம்பட்டவர்களை சந்திக்க வருவதாக நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. அப்போதே தூத்துக்குடி நகரமும், காவல்துறையும் பரபரப்பானது.
இன்று காலை சென்னையில் இருந்து ரஜினி தூத்துக்குடிக்கு காலை 10.40 மணிக்கு விமானத்தில் வந்தார். அவரை வரவேற்பதற்காக தூத்துக்குடி விமான நிலையத்தில் ரஜினி மன்றத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர். போலீசாரின் கெடுபிடியால் ரசிகர்களின் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் ரஜினியின் பல தொண்டர்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்குள் வர முடியவில்லை.
விமான நிலையத்தில் ரஜினியுடன் அவரது டிரைவரும் உதவியாளருமான சுப்பையா மட்டும் உடன் வந்திருந்தார். விமான நிலையம் வந்த ரஜினியை தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளர் ஸ்டாலின் வரவேற்றார். ஒரு சில பொறுப்பாளர்கள் அவருக்கு சால்வை அணிவித்தனர். அதைத்தொடர்ந்து ஸ்டாலினிடம் எப்படி இருக்கிங்க என்று நலம் விசாரித்தார். பின்னர் அவரது பென்ஸ் காரிலேயே தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கிளம்பி வந்தார்.
அவரை பின்தொடர்ந்த பெரும்பாலான வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. மேலும் பின்தொடர்ந்து வந்த ஒரு சில வாகனங்களிலும் அதில் கட்டியிருந்த ரஜினி மக்கள் மன்ற கொடிகளை அகற்றும் படி போலீசார் கூறினர். அதன்பின் ரஜினி போலீசாரின் மூன்று கட்ட பாதுகாப்பை தாண்டி வரவேண்டியதிருந்தது. அதனால் அவரை பின்தொடர்ந்து வந்த ரசிகர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டு ஓரம் கட்டப்பட்டார்கள். விமான நிலையத்தில் இருந்து ரஜினி வருகிற வழியான மடத்தூர், மூன்றாம் மைல், மற்றும் விவிடி சிக்னல் அருகே திரண்டிருந்த மக்கள் ரஜினிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அவர்களை கண்டு வெயிலில் நின்றுகொண்டே ரஜினி வணக்கம் தெரிவித்தார். அதன்பின் சுமார் 11.40 மணி அளவில் அரசு மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் போலீசார் தடுப்புகளை வைத்து ரசிகர்களும், பத்திரிகையாளர்களும், புகைப்படக்காரர்களும் மருத்துவமனை வளாகம் தவிர உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
அங்கு 5வது மாடியில் போலீஸ் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூட்டில் காயம்பட்டு சிகிச்சையில் இருந்தவர்களை பார்க்க போலீசும் மற்ற அதிகாரிகளும் ரஜினியை அழைத்துச்சென்றனர். ரஜினியை சுற்றி அதிகாரிகளும் போலீசாருமே வந்தனர். அவர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் ரஜினியால் காயம்பட்டவர்களிடம் மனம்விட்டோ, சகஜமாகவோ பேசமுடியவில்லை. அவர்களை கையெடுத்து வணங்கியவர். அவர்களை பார்த்து கண்கலங்கினார். உங்களை தேடி பார்க்க வந்துட்டேன் என அவர்களிடம் கூறினார்.
அவர்களில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி நிஷாவிடம் பேசிய ரஜினி, நான் யார் தெரியுமா என்றார்? அதற்கு அந்த மாணவி தெரியும் ரஜினி என்றார். இப்போது காயம் எப்படி இருக்கிறது என்று கேட்டார். பரவாயில்லை என நிஷா பதிலளித்தார்.
இது போன்று நோயாளிகளிடம் அதிக விளக்கங்களை கேட்க முற்பட்டப்போது போலீசாரும், அதிகாரிகளும் சார் கிளம்புவோம், கிளம்புவோம் என்று கூறி அவரை வேக வேகமாக அழைத்து சென்றனர். இதனால் சுமார் 35 நிமிடங்கள் மட்டுமே அவர் அங்கு இருக்க முடிந்தது.