Skip to main content

தனி நாடு தொடர்பாக கருத்து; காங்கிரஸ் எம்.பி.க்கு கார்கே கண்டனம்

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Gharke condemns Congress MP on Comment on individual country

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று முன் தினம் (31-01-2024) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான நேற்று (01-02-2024) மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து 58 நிமிடங்கள் உரை நிகழ்த்தினார்.

நாடாளுமன்றத்தில், அவர் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் குறித்து பலரும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. சுரேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "இது தேர்தல் பட்ஜெட். இந்த இடைக்கால பட்ஜெட்டில் பெயர்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன. மத்திய அரசு, தென் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரிகளில் சரியான முறையில் பங்கை வழங்குவதில்லை. தென் மாநிலங்கள் அநீதியை சந்தித்து வருகின்றன. 

தென் மாநிலங்களில் இருந்து பணத்தை வசூலித்து வட மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால், தனி நாடு கோரும் நிலைக்கு தள்ளப்படுவோம். 4 லட்சம் கோடிக்கு மேல் எங்களிடம் இருந்து மத்திய அரசு பெறுகிறது. ஆனால், அதற்கு ஈடாக நாம் பெறுவது மிகவும் சொற்பம் தான். இதை நாம் கேள்வி கேட்க வேண்டும். இதை சரி செய்யாவிட்டால் அனைத்து தென் மாநிலங்களும் தனி நாடு கோரி குரல் எழுப்ப வேண்டும்" என்று கூறினார். தனி நாடு கோரும் நிலைக்குத் தள்ளப்படுவோம் என்று இவர் கூறியது தற்போது விவாதப் பொருளாக மாறியதால் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில், இன்று (02-02-24) மக்களவையில் நடைபெற்ற கூட்டத்தொடரில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “தனி நாடு கோரி சர்ச்சையை ஏற்படுத்திய காங்கிரஸ் எம்.பி மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், அவர் மீது காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அவரது பதவியை அவமானப்படுத்துவதாகும். இந்த விவகாரத்தை நெறிமுறைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். காங்கிரஸ் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேசினார்.

இதனையடுத்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “நாட்டைப் பிரிப்பது குறித்து யாராவது பேசினால் அவர்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாங்கள் பொறுத்துக் கொள்ளமாட்டோம். அவருக்கு எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாம் ஒற்றுமையாக இருக்கிறோம். காங்கிரஸ் தலைவர்கள் இந்திரா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தேசத்திற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர்” என்று தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்