கஜா புயல் இன்று மாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடலோர மாவட்டங்களில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளன, மீட்பு குழுக்களும் தயாராக உள்ளன. புயல் நெருங்குவதை ஒட்டி எண்ணூர் மற்றும் நாகை மாவட்டங்களில் 3 எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் புயல் காரணமாக 4 விரைவு ரயில்கள் உட்பட 9 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உழவன் எக்ஸ்பிரஸ், திருச்சி - தஞ்சை சிறப்பு கட்டண ரயில் வேளாங்கண்ணி - காரைக்கால், காரைக்கால் தஞ்சை, விழுப்புரம் - மயிலாடுதுறை ஆகிய பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, 7 ரயில்கள் பகுதிநேரம் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன, 3 ரயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட உள்ளன. என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சிதம்பரத்திலுள்ள பிச்சாவரம் சுற்றுலாதளமும் மூடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம், புதுச்சேரி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள மத்திய பல்கலைக்கழகங்கள், அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகள் ஆகியவை இன்று நடக்கவிருக்கும் தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளன. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.