இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போர் நிலவி வருகிறது. இந்தப் போரில் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “1947 ஆம் ஆண்டு வரையில் யூதர்கள் என்ற இனத்திற்கும் - ஆரியர்களைப் போலவே - தங்களுக்கென அரசாள ஒரு தனி நாடு பெற்ற இனமாக இல்லை. இரண்டாம் உலகப் போரின்போது யூதர்களை, ஆரிய இனத்தவன் என்று தன்னை அட்டகாசமாகப் பிரகடனப்படுத்திக் கொண்ட சர்வாதிகாரி ஜெர்மானிய ஹிட்லர் இவர்களை இனப்படுகொலை செய்ததோடு முகாம்களுக்கு அனுப்பி சித்ரவதைக் கொடுமைகளுக்கு ஆளாக்கினான்; அதில் தப்பிப் பிழைத்து சிலர் அமெரிக்கா போன்ற பல நாடுகளில் தஞ்சம் அடைந்தனர் என்பது பழைய கதை.
யூத மக்கள் தங்களுக்கு ஒரு தனி நாடு வேண்டும் என்று ஒரு கோரிக்கையை வற்புறுத்தி வந்ததின் காரணமாக அவர்களது தனித்த அறிவு ஜீவ அழுத்தத்தின் காரணமாக அய்.நா. சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு, பாலஸ்தீனத்தின் 56 விழுக்காடு நிலப் பகுதியை (இஸ்லாமியர்கள் வாழ்ந்த பகுதி) பிரித்து, உலகெங்கும் பரவலாக சிதறி பற்பல நாடுகளில் வாழ்ந்த யூதர்கள் வந்து சேர்ந்தும், பாரம்பரிய மதக் கலாச்சார பின்னணியை வைத்தும், ஒரு தனி நாடு உருவாக்கப்பட்டு, ‘இஸ்ரேல்’ என்று பெயரிடப்பட்டது.
அந்தக் காலகட்டத்தில் இப்படி ஒரு நாடு உருவாவதை - நமது இந்தியா மற்ற சில நாடுகள் பாலஸ்தீனத்தை இப்படிப் பிரித்து தனிநாடு உருவாக்குவதை ஏற்கவில்லை என்பதும், 1950-க்குப் பின்தான் இந்தியா, இஸ்ரேலை அங்கீகரித்தது என்பதும் அந்த வரலாற்றின் மற்றொரு பகுதியாகும். அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும், அய்ரோப்பாவிலும் யூதர்களின் செல்வாக்கு அறிவியல் மற்றும் வணிகம் போன்ற துறைகளில் அதிகரித்தே வந்தது. யூதர்கள், பாலஸ்தீன மக்கள்மீது பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி, பாலஸ்தீனத்தின் 500-க்கும் மேற்பட்ட கிராமங்களை அழித்தொழித்தனர். சுமார் 8 லட்சம் பாலஸ்தீனியர்கள் அகதிகளாக்கப்பட்டனர். பலவிதமான கூலிப்படைத் தாக்குதலால் 15 ஆயிரம் பாலஸ்தீனர்கள், இஸ்ரேல் இனவெறிக்குப் பலியாகும் பரிதாப நிலை ஏற்பட்டு, அப்பகுதி அமைதியற்ற பகுதியாகியது. இந்த சிறுபொறியை அணைத்து, சமரசத் தீர்வு காண அய்.நா.வும், சமாதானத்தை பிற நாடுகள் விரும்பியபோதிலும், அது சாத்தியப்படவில்லை; காரணம், பெரும் வல்லரசான அமெரிக்கா- இஸ்ரேல் பக்கம் நின்றது.
அடிக்கடி நடந்த முந்தைய மோதல்கள் விளைவாக காசா பகுதி, மேற்குப் பகுதிகள் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் இடமாகின. உள்ளே நுழைந்து தனி நாடு கொண்ட இஸ்ரேல் யூதநாடு முந்தைய பாலஸ்தீனத்தினிடமிருந்து 56 விழுக்காடு இடங்களைத் தாண்டி, 78 சதவிகிதத்தை தனது நிலப்பரப்பாக ஆக்கிக் கொண்டது. அப்படித் தொடங்கிய பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலிய நாட்டின் ஆக்கிரமிப்புப் போர் மேகங்கள் எப்போதும் விட்டுவிட்டு நடந்து வந்துள்ளன. யாசர் அராபத்தின் தலைமைக்குப் பிறகு அங்கே பாலஸ்தீனிய மக்கள் இயக்கம் பணி தொடர்ந்தது. இந்த வகையில் பாலஸ்தீனியர்களின் மீது ஏவப்பட்ட அடக்குமுறை - சிறுசிறு யுத்தங்கள் மூலமும் இஸ்ரேல் பாலஸ்தீனப் பகுதிகளை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து, பாலஸ்தீனியர்களின் வாழ்விடங்களை வெகுவாகச் சுருக்கினர். மேற்குக் கரையில் ஒரு சிறு பகுதி மற்றும் காசா நகரம் ஆகிய இரண்டு இடங்கள் தவிர, மற்ற எல்லா பகுதிகளையும் தம் வசமாக்கிக் கொண்டு வெறும் 7 சதுர கிலோ மீட்டர் அளவே பாலஸ்தீனர்கள் வாழும் பகுதியாக சுருக்கப்பட்டுவிட்டது.
இந்தப் பகுதியையும் அழித்து முற்றாக ஒரு ‘அகண்ட இஸ்ரேலையே’ உருவாக்கிக் கொள்ள தற்போதைய இஸ்ரேல் நாட்டின் தலைமை திட்டமிட்டு ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கியது கண்டு, பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்தினருக்கும், பல்வகை இழப்புகள் - உயிர்ப் பலிகள் தொடங்கி பல கொடுமைகளை நாளும் அனுபவித்து வரும் அம்மக்களுக்கும் ஓர் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக அய்.நா.வில் ஒரு நிகழ்வு நடந்தது. 22.9.2023 அன்று அய்.நா.சபையில் பேசிய இஸ்ரேல் நாட்டின் குடியரசுத் தலைவர் நெதன்யாகு, திடீரென ஒரு வரைபடத்தை எடுத்து வந்து அந்த அவையினரிடம் காட்டினார். ‘இனி இதுதான் புதிய மத்திய கிழக்குப் பிரதேசம்’ என்று. அதில் பாலஸ்தீனம் என்ற ஒரு நாடோ, பெயரோ இல்லாமல், ‘தானடித்தமூப்பாகவே’ - சர்வதேச சட்டம், அதன் பாரதூர விளைவுகளைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாமல் இதனைச் செய்தார்.
இதனால் கொதிப்படைந்த பாலஸ்தீன விடுதலைக்காகப் போர்க் குரல் கொடுக்கும் ஹமாஸ் இயக்கம், தங்கள் மீது குண்டு மழை பொழியும் அவலத்தால், வெகுவாகப் பாதிக்கப்பட்டும், அதைத் தடுத்து உண்மையான உலக சமாதானத்தை நிலைநாட்ட வரவில்லை.
இன்று உலகத்தின் எந்த ஒரு பகுதியிலும் போர் மேகங்கள் திரண்டு - கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ரஷ்யா - உக்ரைன் போரில் உயிர், உடைமைகள் இழப்புகள், அங்கே தொழில் செய்த, படித்த நம் நாட்டு மாணவர்களைக் காப்பாற்றியது - ஒரு வகையில் ஒன்றிய அரசும், மாநில அரசும் பாராட்டுக்குரியன என்றாலும், உலகத்தில் இப்படி நிகழ்வதன் மூலாதாரம் எங்கே உள்ளது? போர் ஆயுதங்களைத் தயாரிக்கும் உலகின் முதலாளித்துவ நாடுகளுக்கு ‘அமைதி’ உலகு இருந்தால், அவர்கள் தொழில் நடக்காது அல்லவா. அதனால், மறைமுகமாகப் போர் அவர்களுக்குக் கொள்ளை லாபம் - கொழுத்த செல்வத்தினைப் பெருக்குவதால், அதைக் கண்டித்து, தடுக்க முழு மனதுடன் முன்வருவார்களா?
இதில் இந்திய அரசு முந்தைய அரசின் நிலைப்பாட்டிற்கு நேர் எதிராக, இஸ்ரேல் ஆதரவு நிலை எடுத்திருப்பது எவ்வகையிலும் மனிதாபிமான அடிப்படையில் நியாயம் ஆகாது. மருத்துவமனைகள் மீது கூட குண்டுமழை; சாக்குபோக்கு பழிபோடுவது மற்றவர்கள் மீது என்பது போன்ற நிலை. ‘போர்க் காலங்களில் முதல் பலியாவது உண்மைகள்’ என்ற பழமொழியைத்தான் நினைவூட்டுகிறது.
“மனித இனம் காப்பாற்றப்பட்டு,
மனிதம் பாதுகாக்கப்பட வேண்டும்”
போரற்ற புது உலகம் தோன்றுவது எந்த நாள்?
தீவிரவாதம் - பயங்கரவாதக் கண்டனக் குரல்கள் எவ்வளவு முக்கியமோ, அதைவிட, “போரற்ற புது உலகு”க்காக ஒருமித்த உலக மக்களின் குரல் உலகெங்கும் ஒலிக்க வேண்டியது அவசியம். மனிதாபிமானம் செத்த பின்னால், யாருக்கு என்ன லாபம்?” என்று தெரிவித்துள்ளார்.