பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சிப்காட் தொழில் வளாகத்தில் ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணிப் பூங்கா அமைந்துள்ளது. தற்போது இங்கு நிறுவப்பட்டுள்ள ஜேஆர் ஒன் என்ற காலணி உற்பத்தித் தொழிற்சாலையை காணொலிக் காட்சி வாயிலாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (28.11.2023) திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “பெரம்பலூர் மாவட்டத்தில், இவ்வளவு சிறப்பான திட்டத்திற்கான திறப்பு விழா நடைபெறுகிறது. பரவலான வளர்ச்சியே பார் போற்றும் வளர்ச்சி. சீரான வளர்ச்சியே சிறப்பான வளர்ச்சி என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. பின்தங்கிய மாவட்டங்களில் முதலீடுகளை ஈர்த்திட அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பலன் அளிக்கின்ற வகையில், இந்தத் திட்டத்திற்கான திறப்பு விழா இன்றைக்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலமாக, பெரம்பலூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இன்றைக்கு, முதற்கட்டமாக, 400 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 4000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், கோத்தாரி குழுமத்தைச் சார்ந்த ஜேஆர் ஒன் கோத்தாரி காலணி உற்பத்தித் தொழிற்சாலை துவக்கி வைக்கப்படுகிறது. 2028-ஆம் ஆண்டுக்குள், கோத்தாரி ஃபீனிக்ஸ் நிறுவனம், மேலும் 2,440 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 29 ஆயிரத்து 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்று விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டிருக்கிறது. இவை எல்லாம் முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை விதைத்திருக்கிறது.
இதற்கெல்லாம் மணிமகுடமாக, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை, வருகிற ஜனவரி மாதம் சென்னையில் நடத்த இருக்கிறோம். இது போன்ற நிறுவனங்களோடு சேர்ந்துதான் இந்த மாநாட்டை நடத்த இருக்கிறோம். உலகம் முழுக்க இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வர இருக்கிறார்கள். அதற்கு முன்பாகவே, ஃபீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம், இந்த அதிநவீன உற்பத்தித் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறது மிக மகிழ்ச்சி அளிக்கிறது” எனப் பேசினார்.
இவ்விழாவில் அமைச்சர்கள் எஸ்.எஸ். சிவசங்கர், டி.ஆர்.பி. ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, தொல். திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி.அருண் ராய், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் என கலந்து கொண்டனர். 400 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட்டுள்ள இந்த தொழிற்சாலை மூலம் 4,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.