Skip to main content

"தினகரனை தீண்டினால் ஜெயில் தான்" - நக்கீரனுக்குப் பேட்டி தந்தவரை மிரட்டும் சென்னை காவல்துறை அதிகாரிகள்!

Published on 17/06/2018 | Edited on 17/06/2018
AMMK-new-office


சென்னை அசோக் நகரில் தனது கட்சிக்கான தலைமை அலுவலகத்தை சமீபத்தில் திறந்தார் டிடிவி தினகரன். அந்த அலுவலக கட்டிடத்தில் இருக்கும் வில்லங்கத்தை, 'தினகரனின் அலுவலக வில்லங்கம்; அதிருப்தியில் நிர்வாகிகள்! 'என்ற தலைப்பில் நமது நக்கீரனில் கடந்த வாரம் பதிவு செய்திருந்தோம்.

அந்த செய்தி, தினகரன் தரப்புக்கு ஏக அதிர்ச்சியைத் தந்திருந்தது. இந்தநிலையில், ஆளும் கட்சி தரப்பு, தினகரனுக்கு எதிரான அஸ்திரமாக, அவரது அலுவலக வில்லங்கத்தை தோண்டித்துருவ ஆரம்பித்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில், வில்லங்க செய்தியை நக்கீரன் மூலம் அம்பலப்படுத்திய அதிமுக பிரமுகர் சினிசரவணனை கடந்த 2 நாட்களாக மிரட்டி வருகிறது.

சென்னை ஆலந்தூர் கண்ணன் காலனி நோபல் தெருவில், எம்.ஜி.ஆர். பெயரில் இருந்த அரசு சத்துணவு பள்ளியை சட்டவிரோதமாக விலைக்கு வாங்கிய ஏர்ணஸ்ட் பாலின் அசோக் நகரில் உள்ள கிரீன் பீஸ் நிறுவனத்தின் கட்டிடத்தைதான் தற்போது தினகரன் தனது உறவினரான முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா பெயரில் விலைக்கு வாங்கினார். எர்ணஸ்ட் பால் அலுவலகத்தின் முகவரியைதான் சென்னை உயர்நீதிமன்றத்தில், சத்துணவு பள்ளியை இடித்து விலைக்கு வாங்கிய விவகாரத்தில் சினிசரவணன் தொடர்ந்த பொதுநல வழக்கில் சேர்க்கப்பட்டிருந்து.
 

seeni
                 சினி சரவணன்


இதுகுறித்து விரிவான வில்லங்கத்தைத்தான் நக்கீரன் இதழில் பதிவு செய்திருந்தோம். இதனைச்சுட்டிக்காட்டியே சினி சரவணனை மிரட்டி வருகின்றனர் காவல்துறையினர். இது குறித்து நம்மிடம் பேசிய சரவணன், "நீதிமன்றத்திற்கு எந்தவித முன்அறிவிப்பும் எர்ணஸ்ட்பால் கொடுக்காமல் வழக்குக்கு பயந்து டிடிவி தினகரனினிடம் தனது அலுவலக கட்டிடத்தை பல கோடி ரூபாய் பணத்திற்கு விற்பனை செய்து விட்டு தலைமறைவாகி விட்டார்!

இந்த தகவலை கடந்த வாரம் நக்கீரன் பத்திரிக்கையில் பேட்டியளித்திருந்தேன். இதனால் அதிர்ச்சி அடைந்த டிடிவி தினகரன், தனக்கு நெருக்கமான தமிழக ஆட்சியாளர்கள் மற்றும் டிஜிபி அலுவலக உயரதிகாரி ஒருவர் மூலம், சென்னை கமிஷ்னர் அலுவலக உயரதிகாரி ஒருவரின் உத்தரவில், பரங்கிமலை தெற்கு மண்டலம் துணை ஆணையர் முத்துசாமி மற்றும் செயின்ட் தாமஸ் மவுண்ட் உதவி கமிஷனர் மோகன்தாஸ், பழவந்தாங்கல் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ரத்னவேல்பாண்டியன், ஆதம்பாக்கம் இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில், பழவந்தாங்கல் காவல்நிலையத்தில் என் மீது பொய் வழக்குகளை பதிவுசெய்து என்னை கைது செய்ய தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக, போலீசார் சிலர் மப்டியில் என் வீட்டிற்கு வந்து விசாரித்தபடி இருக்கின்றனர். இந்தநிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை, என்னை நேரில் சந்தித்த காவல்துறை அதிகாரி ஒருவர், தனது உயரதிகாரி ஒருவரின் பெயரைச் சொல்லி, அவரை உடனடியாக தொடர்புகொண்டு பேசவேண்டும் எனவும், அவர் சொல்றபடி நடந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

எதற்காகப் பேச வேண்டும் என நான் கேட்டபோது, தினகரன் அலுவலகம் தொடர்பான விசயத்திலிருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும். ஏற்கனவே நீங்கள் நடத்தி வரும் பொதுநல வழக்கில் இந்த அலுவலக கட்டிடம் தொடர்பான தகவல் இடம்பெற்றிருப்பதால், வழக்கை வாபஸ் பெறவேண்டும் என தினகரன் விரும்புகிறார். அவருக்காக சில அதிகாரிகள் உன்னிடம் பேச நினைக்கின்றனர்.

 

 

உயரதிகாரி சொல்றபடி நடந்துகொண்டால் உனக்குப் பிரச்சனை இல்லை. கேட்கவில்லையெனில், உன்னை கைது செய்து சிறையில் தள்ளவும் அதிகாரிகளுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது. பார்த்து நடந்துக்கொள்ளுங்கள் என ஒருவித எச்சரிக்கை செய்யும் விதத்தில் சொன்னார். அதற்கு நான் சம்மதிக்க மறுத்துவிட்டேன். இதனையடுத்து, தினகரனுக்காக அவருக்கு வேண்டப்பட்ட டிஜிபி அலுவலகம் மற்றும் கமிஷ்னர் அலுவலகத்திலுள்ள மேலிட அதிகாரிகள் இந்த விசயத்தில் சீரியசாக இருக்கின்றனர். அதனால் நாளைக்குள் வழக்கை வாபஸ் பெற்றுக்கொள். இல்லையெனில். நீ, கைதாவதிலிருந்து தப்பிக்க முடியாது என மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை செய்துவிட்டு சென்றுள்ளார்.

இதற்கிடையே, போலீசார் சிலர் என்னை மிரட்டுகின்றனர். இந்த விவகாரத்தை தமிழக முதல்வர் மற்றும் துணைமுதல்வர் உட்பட பலர் மறைமுகமாக கையில் எடுத்து தினகரனின் கட்சி அலுவலகத்தை சீல் வைக்க முயற்சி செய்து வருகிறார்களாம்! இதனால் தான் எனது பொது நல வழக்கை வாபஸ் பெற வேண்டி தினகரனுக்காக, உயரதிகாரிகள் என்னை மிரட்டி வருகிறார்கள்!

என் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் அதற்கு காரணம் தமிழக காவல்துறை உயரதிகாரிகள் தான்" என கதறுகிறார் சினி சரவணன். தினகரனிடம் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என எடப்பாடி அரசின் அமைச்சர்கள் சொல்லிவந்தாலும், அரசு உயரதிகாரிகள் பலர் தினகரனுக்காக ஊழியம் செய்தபடிதான் இருக்கின்றனர்.

சார்ந்த செய்திகள்