சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த 19ஆம் தேதி முதல் வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது. இதனால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடைகள், பெட்ரோல் பங்க் என அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
இன்று அரசு அறிவிப்பின்படி, சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை கடைகள் திறக்கப்பட்டன. கடைகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் வந்தனர். இதில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. கூட்டம் அதிகமாக இருந்தது. இருசக்கர வாகனங்களிலும் பலர் வந்தனர்.
அங்கு போலீஸ் வாகனத்தின் அருகில் நின்ற போலீஸ்காரர் ஒருவரிடம், என்ன சார் எச்சரிக்கவில்லையா? என்றதற்கு, 'எவ்வளவோ சொல்லி பார்த்தாச்சு... கடைகளுக்கு முன்பு வட்டம், சதுரம், செவ்வகமும் போட்டு பாத்தாச்சு... பைக்குல போகாதீங்க, பைக்குல டபுள்ஸ் போகாதீங்கன்னு சொல்லியாச்சு... வீட்டுக்கு பக்கத்துல இருக்குற கடையில வாங்குங்க, ரொம்ப தூரம் போகாதீங்கன்னும் சொல்லியாச்சு... எங்களத்தான் எல்லோரும் திட்டுறாங்க. எங்க மேல வருத்தப்படுறாங்க. என்ன செய்யறது. பொதுமக்கள்தான் ஒத்துழைப்பு தரணும்” என்றார் வேதனையுடன்.