சென்னையில் வாழும் திருநங்கைகள் வாழ்வாதாரத்தில் உயர்ந்திடவும், அவர்கள் சுயதொழில் செய்து சமூகத்தில் கெளரவமாக வாழ வேண்டும் என்ற அடிப்படையிலும் சூளைமேடு F5 காவல்நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாவலர் ஆனந்த்பாபு மற்றும் காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் இராமகிருஷ்ணன், மாரீஸ்வரன், திலகவதி, தீபா, குற்றப்பிரிவு ஆய்வாளர் பிரசித்தீபா மற்றும் நிலைய காவலர்கள் ஆகியோர் ஏற்பாட்டில் சுமார் பத்து இலட்சம் மதிப்புள்ள சுயதொழில் செய்வதற்கான பொருட்கள், 150 திருநங்கைகளுக்கு வழங்கும் விழா எழும்பூர் பழைய கமிஷனர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
திருவல்லிக்கேணி மாவட்ட துணை ஆணையர் (பொறுப்பு) சாமிநாதன், நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் (பொறுப்பு) சுப்ரமணி முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் கிழக்கு மண்டல இணை ஆணையர் சுதாகர் கலந்து கொண்டு நலதிட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அவர் பேசும்போது, "சென்னையில் குறிப்பிட்ட சில பகுதிகள் பெயரை சொன்னாலே அவலமாக பார்க்கும் ஒரு பார்வை இருந்தது, அதை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் காவல்துறை பாடுபட்டு வருகிறது. சென்னை காவல்துறைக்கும், திருநங்கைகளுக்கும் எப்போதும் ஒரு இணக்கமான நட்புறவு இருந்து வருகிறது. வெளியே தெரியாமல் நிறைய உதவிகளை திருநங்கைகளுக்கு நாங்கள் செய்து வருகிறோம். சமூகத்தில் அவர்கள் மீதான அவலமான பார்வை மாற வேண்டும் என்பதே நோக்கம். அதை நோக்கி தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். திருநங்கைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நாங்கள் தாயாராக இருக்கிறோம். நீங்கள் எப்போது எந்த தேவையாக இருந்தாலும் தயங்காமல் எங்களிடம் கேட்கலாம்" என்றார் உறுதியாக.
சென்னையில் பாதிக்கப்பட்ட திருநங்கைகளை அரவணைத்து உதவி புரிந்து சமூக சேவையாற்றி வரும் திருநங்கைகளை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை பெற்ற திருநங்கைகள், தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தவும், தாங்கள் சமுதாயத்தில் கௌவுரமாக வாழவும் உதவி செய்த காவல்துறையினருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினர்.