தமிழக அரசு எடுத்துள்ள கரோனா தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை விவரங்களை நேரில் தெரிந்து கொள்ள மத்தியக் குழு சென்னை வந்தது. தலைமைச் செயலாளர் கே.சண்முகத்துடன் ஆய்வு செய்த மத்திய குழுவினர், பின்னர் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாசுடன், சென்னையில் கரோனா பரவுவதைத் தடுப்பதற்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன? என்பது பற்றி ஆலோசனை மேற்கொண்டனர்.
அதைத் தொடர்ந்து தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை, வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டு இருக்கும் கண்ணப்பர் திடல், ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி தெருவில் உள்ள சமுதாயக் கூடம், கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள புதுப்பேட்டை ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இன்று 2- ஆவது நாளாக அரசு ஓமந்தூரார் மருத்துவமனை கரோனா சிறப்பு வார்டில், உரிய பாதுகாப்புக் கவசங்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின்னர் கோயம்பேடு வணிக வளாகத்துக்குச் சென்றனர். அங்குக் காய்கறி மார்க்கெட்டுக்கு நடந்து சென்று பார்வையிட்டு அங்கிருந்த வேன் டிரைவர்களிடம் விசாரித்தனர். அவர்களிடம் அனுமதி அட்டை உள்ளதையும் வாங்கிப் பார்த்தனர். விருகம்பாக்கத்தில் உள்ள அம்மா உணவகத்திலும் ஆய்வு மேற்கொண்டனர்.