
சென்னை, கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காகச் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர்ப் பேருந்து முனையம் அமைத்திட தமிழ்நாடு அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய புறநகர்ப் பேருந்து முனையக் கட்டுமானத்திற்காக சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு நிலம் மாற்றப்பட்டு, தொடர்புடைய அனைத்துக் கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி இந்த புதிய பேருந்து முனையத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ எனப் பெயரிடப்பட்டு 393.74 கோடி ரூபாய் செலவில் சுமார் 6 இலட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டடங்கள் அமைக்கப்பட்டன. இந்த பேருந்து முனையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி திறந்து வைத்தார். இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து முதற்கட்டமாக அரசு விரைவு பேருந்துகள் (SETC) இயக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜனவரி 24 ஆம் தேதி முதல் தனியார் சொகுசு பேருந்துகள் (OMNI BUS) இயக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் 710 அரசுப் பேருந்துகளும் (TNSTC) கடந்த 30 ஆம் தேதி (30.01.2024) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘இந்த வழக்கு முடியும் வரை கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “ஆம்னி பேருந்துகளின் கேரேஜ்கள் கோயம்பேட்டில் இருப்பதால், தற்போதைக்கு சூரப்பட்டு, போரூர், தாம்பரத்தில் பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதிக்கப்படும். பெருங்களத்தூரில் பயணிகளை இறக்கிவிட மட்டும் அனுமதி வழங்கப்படும்” என விளக்கமளிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, “சென்னைக்கு உள்ளேயே பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கினால், பேருந்து கிளாம்பாக்கம் செல்வதற்கு முன்னதாகவே இருக்கைகள் நிரம்பிவிடும். எனவே கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் கொண்டு வந்ததன் நோக்கமே வீணாகிவிடும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் ஆம்னி பேருந்துகள் செல்ல அனுமதிக்கப்பட்ட வழித்தட வரைபடத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கு விசாரணையை வரும் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.