தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்க பணிகளை நிறுத்த உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதை எதிர்த்தும், 2 ஆவது பிரிவை அனுமதி பெற்ற இடத்தில் தொடங்கவில்லை எனக் கூறியும் பேராசிரியை பாத்திமா தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் சுந்தர், அனிதா சுமந்த் அமர்வில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். அதில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிகளை நிறுத்த உத்தரவு பிறப்பித்தனர். தொடர்ந்து விரிவாக்கம் குறித்து பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை 4 மாதங்களுக்குள் நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சுற்றுச்சூழல்துறை அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனம் மனுவை பரிசீலித்து முடிவு எடுக்கவும், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.