அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு வழங்கியுள்ளது.
ராமர் பிறந்த இடத்தில் இருந்த கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டதாகவும், மீண்டும் அந்த இடத்தில ராமருக்கு கோவில் கட்ட வேண்டும் எனவும் சர்ச்சை எழுந்தது.
இதனையடுத்து கடந்த 1992 ஆம் ஆண்டு சங்பரிவார் அமைப்புகளை சேர்ந்த கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்கள் காரணமாக 1993 ஆம் ஆண்டில் சர்ச்சைக்குரிய இடத்தை மத்திய அரசு கையகப்படுத்தியது. பின்னர் இந்த நிலம் தொடர்பாக அலஹாபாத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த அந்த நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்றாகப் பிரித்து இஸ்லாமிய அமைப்பான சன்னி வக்பு வாரியம், மற்றும் இந்து அமைப்புகளான நிர்மோகி அகாரா, ராம் லல்லா விராஜ்மான் ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு பல ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இதன் தீர்ப்பு வழக்கப்பட்டுள்ளது. அதன்படி, அயோத்தி வழக்கில் ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒரு மித்த தீர்ப்பை அளித்துள்ளது.
சன்னி பிரிவுக்கு எதிராக ஷியா வக்பு போர்டு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலத்திற்கு உரிமைக் கோரி நிர்மோஹி அகாரா தொடர்ந்த வழக்கில் எந்தவித ஆதாரமும் இல்லை. ’ஒரு மதத்தினரின் நம்பிக்கை மற்ற மத நம்பிக்கை தடுப்பதாக இருக்கக் கூடாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு நடுநிலையை காக்க வேண்டும் பொறுப்பில் நீதிமன்றம் இருக்கிறது. மதச்சார்பின்மையே அரசியல் சாசனத்தின் அடிப்படை பண்பு. பாபர் மசூதி காலியிடத்தில் கட்டப்படவில்லை, அந்த இடத்தில் முன்பே ஒரு கட்டடம் இருந்தது, அது இஸ்லாமிய முறைப்படி கட்டப்பட்ட கட்டிடம் இல்லை.
அமைதியைக் காக்கவும், பாதுகாப்பை பராமரிக்கும் வகையிலும் அயோத்தி தீர்ப்பை மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தொல்லியல்துறையின் ஆய்வு அறிக்கையை யாரும் நிராகரித்து விட்டுவிட முடியாது. மத நம்பிக்கை என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. அயோத்திதான் ராமர் பிறந்த இடம் என்பதை இந்துக்கள் நம்புவதை மறுக்க முடியாது. அதே இடத்தை பாபர் மசூதி என இஸ்லாமியர்கள் அழைக்கிறார்கள். ஆவணங்களின்படி சர்ச்சைக்குரிய நிலம் அரசுக்கு சொந்தமானது. நிலத்தின் உரிமையை நம்பிக்கையின் அடிப்படையில் முடிவு செய்ய முடியாது. 1857ஆம் ஆண்டுக்கு முன்புவரை இந்துக்கள் சர்ச்சைக்குரிய கட்டடத்தின் உள்பகுதியில் வழிபட தடையில்லை. 1857ல் கட்டடத்தின் உள்பகுதிக்கும், வெளிப்பகுதிக்கும் இடையே தடுப்புகள் உருவாக்கப்பட்டன. பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களது என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை. 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயல். அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாக பிரித்தது தவறு. இஸ்லாமியர்களுக்கு மாற்று நிலம் வழங்க வேண்டும். நிபந்தனைகளின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கு அளிக்கப்பட வேண்டும்’என்று தெரிவித்த தலைமை நீதிபதி, வக்பு போர்டு ஏற்கும் இடத்தில் ஐந்து ஏக்கர் மாற்று நிலம் வழங்க மத்திய அரசு, உபி அரசுக்கு உத்தரவிட்டார். சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட 3 மாதங்களுக்குள் மத்திய அரசு ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.