Skip to main content

ஆந்திர கிராமத்தில் கைதிகளைத் தேடிய புழல் சிறை அலுவலர்கள்! -'தீரன் அதிகாரம் ஒன்று' சினிமா போல் விரட்டியடிப்பு!

Published on 11/05/2020 | Edited on 11/05/2020

 

ccc


ஆந்திராவிலிருந்து சென்னைக்கு காய்கறி மூட்டையில் கடத்தி வந்த கஞ்சாவை, மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு திருவள்ளூரில் கைப்பற்றியது. கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்தக் கைதிகளில் இருவர், தங்களது வழக்கறிஞர் மூலம், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமின் கோரியிருந்தனர். அந்த மனு தள்ளுபடியாகி, அது குறித்த உத்தரவு புழல் சிறைக்கு வந்தது. அது தள்ளுபடி உத்தரவு என்பதைக்கூட சரியாகக் கவனிக்காமல், பிணை உத்தரவு என்று கருதி, ‘தேவையான நடவடிக்கை எடுக்கவும்’ என்று எழுதிவிட்டார், கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன். பிறகென்ன? சிறை அலுவலர் குணசேகரன், தண்டனை குறைப்பு பிரிவு எழுத்தர் கோடீஸ்வரன்,  முதல்நிலை தலைமைக் காவலர் கணேசமூர்த்தி ஆகியோர், சிறை கண்காணிப்பாளரே சொல்லிவிட்டார் என்று, கைதிகள் இருவரையும் ‘ரிலீஸ்’ செய்துவிட்டனர். 

 

 

சிறை விதிகளின்படி, பிணை உத்தரவு பிரகாரம் கைதி ஒருவரை ரிலீஸ் செய்வதாக இருந்தால், அவர் மீது பழைய வழக்கு எதுவும் நிலுவையில் உள்ளதா என்று சரிபார்த்த பிறகே, பிணையில் அனுப்ப வேண்டும். மேலும், கைதிகளைப் பிணையில் விடும் அதிகாரமானது, கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளருக்கு மட்டுமே உண்டு. ஆனால், புழல் சிறை கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணனோ, ஜெயிலர், ரெமிசன் கிளார்க் போன்றோரிடம் பிணையில் விடும் பணியை ஒப்படைத்துவிட்டார். தவறுதலாக இருவரை சிறையிலிருந்து வெளியேற்றியது, கடந்த 5-ஆம் தேதிதான் தெரிய வருகிறது. ‘மோசம் போய்விட்டோமே’ என்று அடித்துப்பிடித்து, குணசேகரன், கோடீஸ்வரன், கணேசமூர்த்தி ஆகிய மூவரும், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினரோடு சேர்ந்து, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் போய் இரண்டு கைதிகளையும் தேடினார்கள். கைதிகளின் சொந்த கிராமமோ, தீரன் அதிகாரம் ஒன்று சினிமா ரேஞ்சுக்கு, இவர்களை விரட்டிவிட்டது.  
 

இந்த சூழ்நிலையில், விசாகப்பட்டினம் ரசாயண ஆலையில் விஷவாயுக் கசிவு விவகாரம் பெரிதாக வெடிக்க, அத்தனை காவலர்களும் அங்கு போய்விட்டனர். கைதிகளைப் பிடிப்பதற்கு விசாகப்பட்டினம் காவலர்களின் உதவி கிடைக்காததால், சென்னையிலிருந்து கிளம்பிய சிறை ஊழியர்கள், தற்போது விசாகப்பட்டினம் சிறையில் தஞ்சம் அடைந்திருக்கின்றனர். 
 

இதே ரீதியில், உயர் நீதிமன்ற உத்தரவை புரிந்துகொள்ளாமல் கைதிகளைத் தவறுதலாக ரிலீஸ் செய்தது இதற்கு முன்பும் நடந்துள்ளது, கண்காணிப்பாளர் செந்தாமரைகண்ணன் ‘டோஸ்’ வாங்கியிருக்கிறார், சிறைத்துறை டிஜிபி ஆபாஷ்குமார் மாற்றப்பட்டு, அந்த இடத்துக்கு வந்திருக்கிறார், சுனில்குமார் சிங். கண்காணிப்பாளர்கள் கூட்டத்தைக் கூட இன்னும் அவர் நடத்தவில்லை என்று சிறைத்துறை வட்டாரத்தில் முணுமுணுக்கின்றனர். 
 

தமிழக சிறைத்துறை எப்போது சீராகுமோ?  

 

 

சார்ந்த செய்திகள்