திண்டுக்கல்லுக்கு சிவகங்கை எம்.பி. கார்த்திக் சிதம்பரம் வருகை தந்தவர் நாகல்நகர் அருகே உள்ள பயணியர் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், இந்தியாவில் கரோனா வேகமாக பரவி வருகிறது. மத்திய மாநில அரசுகளிடம் தடுக்க யுக்திகள் இல்லை. உலக அளவில் மருந்து வந்தால் தான் தீர்வு ஏற்படும். ஊரடங்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்பு மின்சாரம் என்றால் பயமாக இருக்கும். ஆனால் தற்பொழுது மின்சாரக் கட்டணத்தை பார்த்தால் ஷாக் அடிக்குது. விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தொடர்ந்து தர வேண்டும்.
தமிழகத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து உள்ளனர். ஆனால் பாஜக மட்டும் அதனை விரும்பவில்லை. அதிமுகவில் ஒற்றைத் தலைமை இல்லை. சசிகலா சிறையில் இருந்து வந்தவுடன் அமமுக, அதிமுக ஒன்றிணைந்து செயல்படுவார்கள். இந்தியாவிற்க்கு புதிதாக கோவில்கள் தேவையில்லை, நான் கடவுள் நம்பிக்கை உடையவன்.
இந்தியாவிற்கு மருத்துவமனை, கல்லூரி, பள்ளிகள் தான் தேவை. பாஜக முத்திரை பதிக்க கோயில்கள் கட்டுகின்றனர். கறுப்பர் கூட்டத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். பெரியார் அவமதிப்பு செய்தவர்களைக் கண்டிக்கிறேன். தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் எடப்பாடி அரசு, ஒரு விபத்தில் உருவான அரசாங்கம். இந்த ஆட்சிக்கு ஆறு மாதத்தில் நல்ல தீர்வு கிடைக்கும். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்துக்கு நல்ல முடிவு கிடைக்கும். திமுக காங்கிரஸ் கூட்டணி பொதுத் தேர்தலுக்கு தயாராக உள்ளோம். அடுத்த ஆண்டு தேர்தல் கண்டிப்பாக நடைபெறும். அடுத்த ஆண்டு எங்கள் கூட்டணி வெற்றி பெற்று மு.க ஸ்டாலின் ஆட்சியில் அமருவார்.
பாராளுமன்றம் நடைபெறாத சமயத்தில் சுற்றுச்சூழல் சம்பந்தமான அவசர சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களையோ உள்ளாட்சி அமைப்புகளையோ உள்ளூர் மக்களையோ கலந்து ஆலோசிக்காமல் நிறைவேற்றப்பட்டது. இது சுற்றுச்சூழலுக்கு விரோதமானது மட்டுமல்லாமல் ஜனநாயக விரோதமானது கூட. ஒவ்வொரு தனிநபருக்கும் ரூபாய் 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. ஆனால் ஆயிரம் ரூபாயைக் கொடுத்து அதிமுக அரசு மக்களை ஏமாற்றியுள்ளது. சிறு குறு தொழில் அதிபர்கள் கடன் வழங்குவதற்காக 20 லட்சம் கோடி ஒதுக்கியதாக மத்திய அரசாங்கம் அறிவித்தது. ஆனால் எந்த வங்கியிலும் செயல்படாத நிலையில் கரோனா காலத்தில் பயனாளிகளுக்கு கடன் கிடைப்பது சாத்தியமில்லை என்று கூறினார்.