Skip to main content

2019 தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை ருசிபார்க்கும்! - சந்திரபாபு நாயுடு அதிரடி

Published on 27/05/2018 | Edited on 27/05/2018

நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை ருசிபார்க்கும் என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 
 

ChandraBabu

 

ஆந்திர மாநிலத்திற்கு மத்திய பட்ஜெட்டில் குறைந்த நிதி ஒதுக்கியது, மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தருவதாகக் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றாதது என சில காரணங்களால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது ஆந்திர மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி.
 

இதையடுத்து அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு தொடர்ந்து மத்தியில் ஆளும் மோடி அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். மோடி அரசின் நான்காண்டு கால அரசு குறித்து எதிர்க்கட்சிகள் பலரும் விமர்சித்து வரும் நிலையில், அடுத்த தேர்தலில் பா.ஜ.க. தோற்கும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
 

மோடி அரசை விமர்சித்துப் பேசிய அவர், ‘மோடி அரசு எப்போதும் ஆடம்பரமான வாக்குறுதிகளைத் தரும். ஆனால், செயல்பாட்டில் ஒன்றும் இருக்காது. மோடி மிகையாக பேசுவார். ஆனால், எதுவும் செய்யமாட்டார். இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என எண்ணி மோடி நடைமுறைப்படுத்திய பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை நான் ஆதரித்தேன். மத்திய அரசால்தான் வங்கிகள் திவாலாகிக் கொண்டிருக்கின்றன. மக்கள் வங்கிகளின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். இவ்வளவு மோசமான பணத்தட்டுப்பாட்டை இந்த நாடு ஒருபோதும் கண்டதில்லை’ என தெரிவித்துள்ளார். மேலும், ‘2019ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் மாநிலக்கட்சிகளே ஆட்சியைத் தீர்மானிக்கும். எல்லா எதிர்க்கட்சிகளும் இணைந்து பா.ஜ.க.வைத் தோற்கடிக்கும். 2019ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை ருசிபார்க்கும்’ எனவும் பேசியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்