இஸ்ரோவின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சிவன் நியமிக்கப்பட்டார்.
கர்நாடகாவை சேர்ந்த திருநங்கை அக்கை பத்மசாலி என்பவர் வாசுதேவ் என்ற சமூக செயற்பாட்டாளரை கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணம் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டிருந்தது. கர்நாடக மாநிலத்தில் திருநங்கை ஒருவரின் திருமணம் பதிவு செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
கடந்த ஜனவரியில் பத்ம விருதுகள்: இளையராஜா, தோனி, விஜயலட்சுமி ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் ஐயர், இஸ்லாமியர்களை தவிர்த்துவிட்டு இந்தியா குறித்து பேச முடியாது என்றார்.
தென்கொரியா நாட்டில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த தன்னுடைய மகன் கலந்துகொள்கிறார் என்பதற்காக ஹூவிலர் என்ற தந்தை, 17,000 கிமீ தொலைவிலுள்ள தென்கொரியாவுக்கு சைக்கிளிலேயே பயணம் செய்தார்.
ஆண்கள் துணையின்றி பெண்களே சுயமாக தொழில் தொடங்கலாம் என கடந்த பிப்ரவரி மாதத்தின்போது சவூதி அரேபியா அரசாங்கம் தெரிவித்தது. இது உட்பட பல புதிய ஆக்கப்பூர்வ அறிவிப்புகளை அவ்வரசாங்கம் வெளியிட்டது.
கர்நாடக மாநிலத்துக்கென்று தனியாக கொடியை கடந்த மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்து வைத்தார் அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா. மஞ்சள், வெள்ளை, சிவப்பு உள்ளிட்ட 3 நிறத்திலான கொடியின் நடுவே கர்நாடக மாநில அரசின் சின்னம் இடம்பெற்றிருக்கும்.
ஹதியா அவரது கணவருடன் சேர்ந்து வாழலாம்! - உச்சநீதிமன்றம் தீர்ப்பு. மேலும், ஹதியாவின் திருமண விருப்பத்திற்குள் தலையிட யாருக்கும் உரிமையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
கடந்த மே மாதத்தில் திருச்சியை சேர்ந்த பள்ளி மாணவி குறைந்த எடை கொண்ட சாட்டிலைட் ஒன்றை கண்டுபிடித்து, அதற்கு ‘அனிதா-சாட்’ என்று பெயர் சூட்டினார்.
‘யோகா எந்த மதத்திற்கும் சொந்தமல்ல’ என்று சர்வதேச யோகா தினத்தன்று கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறினார்.
உலகிலேயே பெண்கள் வாகனங்கள் ஓட்ட தடை போட்ட ஒரே நாடாக பார்க்கப்பட்டுவந்த சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடை கடந்த ஜூன் மாதத்திலிருந்து நீக்கப்பட்டது.
ஆசிரியர் பகவான் என்பவருக்கு பணி மாற்றம் வந்தது. ஆனால், பள்ளி மாணவர்கள் அவரை வேறொரு பள்ளிக்கு மாற்றக்கூடாது என்று பாசப்போராட்டத்தை நடத்தினார்கள். இந்த சம்பவம் அப்போது பெரிதும் பேசப்பட்டது.
தெலுங்கானாவை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் தங்கள் தொகுதியிலுள்ள கிராமத்தினருக்கு அச்சத்தை போக்க சுடுகாட்டில் ஒரு இரவு தனியாக படுத்து உறங்கிய சம்பவம் பெரும் வைரலானது.
தாய்லாந்திலுள்ள ஒரு குகையில் 13 சிறுவர்கள் சிக்கிக்கொண்டனர். பிறகு ஒன்பது நாட்கள் கழித்து அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பல நாட்கள் போராட்டங்களுக்கு பின்னர் சிக்கிக்கொண்ட 13 பேரும் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால், மீட்பு பணியில் இருந்த காவலர் ஒருவர் மீட்பு பணியின்போது உயிரிழந்தார்.
மறைந்த திமுக முன்னாள் தலைவர் கலைஞரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய தற்போதைய தமிழக அரசு மறுத்தது. இதனை அடுத்து இரவோடு இரவாக வழக்கு தொடரப்பட்டது. அதன் பின் வழக்கை விசாரித்த நீதிபதி, காமராஜருக்கு மெரினாவில் இடம் வழங்கவேண்டும் என்று யாரும் கோரிக்கை வைக்கவில்லை. முதல்வர், முன்னாள் முதல்வர் குறித்த நெறிமுறைகளை இந்த வழக்கில் ஏற்றுக்கொள்ள முடியாது. முதல்வர்களை மட்டுமே மெரினாவில் அடக்கம் செய்யலாம் என விதிகளில் இல்லை என தெரிவித்தது. மெரினாவில் கலைஞருக்கு இடம் ஒதுக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவும் அளித்தது.
கடந்த சில ஆண்டுகளாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் ‘மீனாட்சிபுரம் மதம் மாற்றம் - பாதிக்கப்பட்டோரின் பார்வை’ என்கிற தலைப்பில் 1981-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் நடந்த மதம் மாற்றம் குறித்து திருமாவளவன் ஆராய்ச்சி செய்தார். தான் மேற்கொண்ட முனைவர் (doctorate) பட்ட ஆய்வு அறிக்கையை பல்கலைகழகத்தில் சமர்பித்து கடந்த ஆகஸ்ட் மாதம் முனைவர் பட்டம் பெற்றார்.
பத்து ஆண்டுகால போராட்டத்திற்கு பின் கடந்த செப்டம்பர் மாதத்தின்போது உச்சநீதிமன்றம் ஐபிசி 377 நீக்கப்பட்டு தீர்ப்பளித்தது.
செப்டம்பரில் சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை திறந்து வைத்தார் மோடி.
‘சாம்பியன் ஆப் தி எர்த்' எனும் ஐநாவின் உயரிய சுற்றுசூழல் விருது இந்த ஆண்டு பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி 52 நாள் சிறைவாசத்திற்கு பின்னர் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த அக்டோபர் 9ஆம் தேதி நக்கீரன் ஆசிரியர் விமான நிலையத்தில் ஆளுநர் மாளிகையின் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அவரது கைதை கண்டித்து பல அரசியல் தலைவர்கள் முதல் சாமானியர்கள் வரை தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர். எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு நடைபெற்றது. ஆசிரியரை சிறையில் அடைக்க வேண்டும் என்ற போலீஸ் தரப்பு வாதத்தை நிராகரித்தார் மாஜிஸ்திரேட் கோபிநாத். மேலும் வழக்கில் இருந்து ஆசிரியரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
கடந்த நவம்பரில் கேரளாவைச் சேர்ந்த 96 வயது பாட்டி, அகபஷரலகபஷம் எழுத்தேர்வில் 98 சதவீதம் மதிப்பெண்களைப் பெற்றார். பின்னர், அந்த பாட்டிக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்தளவில் நிவாரணப் பொருட்களை வைத்து அணுப்பிய கல்லூரி மாணவர்களுக்கு, வண்டி முழுவதும் இளநீரை போட்டு திருப்பி அனுப்பினர். இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் பெரிதாக பேசப்பட்டது.
ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு அஞ்சலியின்போது, திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆண் ஆளுமைகள் இருக்கும் அரசியல் களத்தில் ஒரு பெண்ணாக எதிர்நீச்சல் போட்டு வெற்றிகண்டவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என புகழாரம் சூட்டியிருந்தார்.
டிசம்பர் 9ஆம் தேதி சக்தி என்ற இளைஞரை சாதி மறுப்பு மறுமணம் செய்துகொண்டார் கௌசல்யா.
அண்ணா அறிவாலயத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு சிலை வைக்கப்பட்டது. அதனை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திறந்துவைத்தார்.
மபியில் முதல்வராக காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் பதவியேற்ற நான்கு மணிநேரத்தில் விவசாயக் கடன்களை ரத்து செய்து முதல் ஆணையை வெளியிட்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் சாலையில் இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ, சாலையை ஆக்கிரமித்தோ பேனர்கள் வைக்க தமிழ்நாடு முழுக்க தடைவிதித்து உத்தரவிடப்பட்டது.
அசாம் மாநிலத்தில் நாட்டின் மிகப்பெரிய பேருந்து மற்றும் இரயில் பாலமான போகிபீல் பாலத்தை பிரதமர் மோடி டிசம்பர் 25ஆம் திறந்து வைத்தார்.
வாஜ்பாயின் 94-வது பிறந்தநாளான டிசம்பர் 25ஆம் தேதியன்று அவருக்கு டெல்லி ராஜ்காட் அருகே ஒன்றரை ஏக்கர் பரப்பில், 10 கோடியே 51 இலட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டிருந்த ’சதைவ் அதல்’ எனும் பெயரிட்ட அவரின் நினைவிடம் திறக்கப்பட்டது.