கேரள உயரதிகாரிகள் உடைந்தையுடன் நடந்துள்ள தங்க கடத்தல்களால் கேரள முதல்வர் பினராயி விஜயனின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடத்தலில் தொடர்புடைய அழகி ஸ்வப்னாவுக்கு முதல்வர் அலுவலகத்துடன் தொடர்பு இருப்பதால், கிடுகிடுத்திருக்கிறது கேரள அரசாங்கம். இந்த நிலையில், தங்கம் கடத்தல் விவகாரத்தின் அனைத்து ஆணி வேர்களையும் கண்டறிய அதிவேக புலனாய்வுகளை துவக்கியிருக்கிறது சி.பி.ஐ.! இதனால் கேரள அரசியலில் பரபரப்பும், அதிர்ச்சிகளும் அதிகரித்தபடி இருக்கிறது!
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயனின் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடந்து வருகிறது. ஜனநாயக நெறிகளுக்கும், சட்டங்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில் ஆட்சி செய்து வருகிறார் பினராயி விஜயன். அப்படிப்பட்டவரின் ஆட்சியில், தங்க கடத்தல் நடந்திருப்பதும் அதற்கு துணையாக பினராயி விஜயனின் முதன்மை செயலாளர் சிவசங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளதாக வரும் தகவல்கள் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் திருவனந்தபுரத்தில் இயங்கி வருகிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதரக கிளை அலுவலகம். இந்த தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரிகளின் உதவியுடன் கேரளாவுக்கு தங்கம் கடத்தப்படுகிறது என சுங்கத்துறைக்கு கடந்த வாரம் தகவல் கிடைத்ததை அடுத்து, கேரளாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பை முடுக்கி விட்டுள்ளது மத்திய அரசின் சுங்கத்துறை. குறிப்பாக, திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வரும் பார்சல்கள் மீதான கண்காணிப்பை வேகப்படுத்தியிருந்தது.
விமான நிலையத்துக்கு வந்த பர்சல்களை கடுமையாக சோதனைக்கு உட்படுத்தினார்கள் கஸ்டம்ஸ் அதிகாரிகள். ஐக்கிய அரபு எமிரேட்சின் தூதரகத்திற்கு வரும் பார்சல்கள் மட்டும் தனியாக ஓரங்கட்டப்பட்டன. தூதரக அதிகாரிகளை வரவழைத்து அந்த பார்சல்கள் உடைக்கப்பட்டபோது, வீடுகளில் கதவுகளுக்குப் பயன்படுத்தும் தாழ்ப்பாள், கைப்பிடிகள், இரும்பு குழாய்கள் உள்ளிட்ட பல பொருட்களில் தங்கம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர் கஸ்டம்ஸ் அதிகாரிகள்.
சுமார் 30 கிலோவுக்கும் அதிகமான தங்கம் பிடிப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய்க்கும் அதிகம் என மதிப்பிட்டுள்ளனர் அதிகாரிகள். இந்த நிலையில், தங்கம் கடத்தலுக்கு பயன்பட்ட பார்சல்கள் யாருக்கு வந்திருக்கிறது என ஆராய்ந்தபோது, குறிப்பிட்ட தூதரகத்தின் முக்கிய அதிகாரி பெயருக்கு துபாயிலுள்ள அவரது மனைவி அனுப்பி வைத்திருப்பது தெரிந்தது. அந்த அதிகாரியை அழைத்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்த போது, “இந்த பார்சல்கள் எனக்கு வந்தவை அல்ல! என் மனைவியும் இதனை அனுப்பவில்லை” என்று கூறியிருக்கிறார். அதேசமயம், துபாயிலுள்ள அவரது மனைவிக்கு எந்த சந்தேகம் வாராதபடிக்கு சுங்கத்துறையின் ஃபோன் போட்டு விசாரித்தனர் அதிகாரிகள். அவரோ, எந்த பார்சல்களும் என் கணவருக்கு நான் அனுப்பவில்லை என மிக இயல்பாக கூறியுள்ளார்.
அந்த வகையில் சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு இந்த பார்சல்கள் வரவில்லை என முடிவுக்கு வந்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அப்போது, ஐக்கிய அரசு எமிரேட்சின் தூதரகத்தில் மக்கள் தொடர்பு துறையில் வேலைப்பார்த்த சாஜித் என்பவருக்கு தொடர்பு இருப்பதை கண்டுப்பிடித்தனர் அதிகாரிகள். உடனடியாக சாஜித்தின் இருப்பிடத்தை கண்டுபிடித்து அவரிடம் சுங்கத்துறை பாணியில் விசாரித்தபோது, “அந்த பார்சல்கள் எனக்கு வந்தவைதான். தூதரக அதிகாரிகளின் பெயரில் வரவழைத்ததும் நான்தான். பல மாதங்களாகவே இதனை செய்து வருகிறோம்” என ஒப்புதல் வாக்குமூலம் தந்த அவர், கடத்தலின் சூத்திரதாரியாக இருந்த, கேரள அரசின் தகவல் தொழில் நுட்பத் துறையில் மேனேஜராக பணி புரியும் அழகி ஸ்வப்னாவை அடையாளம் காட்டினார்.
சாஜித்தை கைது செய்த சுங்கத்துறையினர், சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு தகவல் தந்து விட்டு, அழகி ஸ்வப்னாவை பிடிக்க விரைந்தனர். ஆனால், சாஜித் சிக்கிக் கொண்டதையும் தன்னைப் பற்றி அதிகாரிகளிடம் சொல்லி விட்டதையும் அறிந்த அழகி ஸ்வப்னா, அதிகாரிகளுக்கு டாடா காட்டிவிட்டு தலைமறைவானார். இதனால், ஸ்வப்னா தங்கியிருந்த வீட்டுக்கும், அவரது அலுவலகத்துக்கும் சென்ற அதிகாரிகள், வெறுங்கையுடன் திரும்பினர்.
கேரள அரசில் பணிபுரியும் அழகி ஸ்வப்னாதான் தங்கம் கடத்தலின் பிதா மகள் என்கிற தகவல் றெக்கைக் கட்டி பறக்க கேரளா முழுவதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இந்த நிலையில், சுங்கத்துறையினருடன் இணைந்து புலனாய்வை வேகப்படுத்திய சிபிஐ அதிகாரிகள், அழகி ஸ்வப்னாவுக்கும், முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளர் சிவசங்கருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை கண்டுப்பிடித்தனர். இதனை பின்ராயி விஜயனின் கவனத்துக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் கொண்டு செல்ல அதிர்ச்சியடைந்த அவர், முதன்மை செயலாளர் பதவியிலிருந்து சிவசங்கரை நீக்கினார்.
தங்க கடத்தலில் தொடர்புடைய அழகி ஸ்வப்னாவுக்கும், சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பதால், இந்த கடத்தலுக்கு முதல்வர் அலுவலகத்துக்கும் தொடர்பு இருக்கும் என்றும், அதனால் முதல்வர் பதவியிலிருந்து பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ், பாஜக தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். இதனால், கேரள அரசு ஆட்டம் காணத் துவங்கியுள்ளது.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் குற்றசாட்டுகளை மறுத்த பினராயி விஜயன், “தங்கம் கடத்தலில் தொடர்புடைய பெண்ணை எனக்கு தெரியாது, அவர் எப்படி அரசு துறையில் பணியில் அமர்த்தப்பட்டார் என்பதும் எனக்கு தெரியாது. குற்றத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விசயத்தில், முதல்வர் அலுவலகத்தின் மீதும், என் மீதும் பழி போடுவது ஏற்புடையதல்ல!” என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
இந்த சூழலில் அழகி ஸ்வப்னாவை பிடிக்க பல கோணங்களில் வலையை விரித்துள்ளனர் அதிகாரிகள். இதனையடுத்து, யார் அந்த அழகி ஸ்வப்னா, அவரது பின்னணி என்ன, அவருக்கு உதவிய அதிகாரிகள் யார் என்கிற கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் சி.பி.ஐ.க்கு கிடைத்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சின் தூதரக அலுவலகத்தில் நிர்வாக செயலாளராக 8 மாதங்களுக்கு முன்புவரை இருந்துள்ளார் ஸ்வப்னா! அலுவலகத்தில் அனைவரிடமும் மிக ஜோவியலாக பழகிய ஸ்வப்னாவின் அழகில் தூதரக அதிகாரிகள் பலரும் மயங்கியிருந்தனர். பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் அழகியாக வலம் வந்துள்ள ஸ்வப்னா, கேரள அரசின் உயரதிகாரிகளுடன் பழகும் வாய்ப்புகளை உருவாக்கி கொண்டார். தூதரக அதிகாரி என்கிற பதவியும், கவர்ந்திழுக்கும் அழகான தோற்றமும் கேரள அரசின் உயரதிகாரிகளை தடையின்றி சந்திக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளது.
அந்த வகையில், ஸ்வப்னாவின் அழகில் மயங்கி அவரை நட்பாக்கி கொண்டார் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவசங்கர். தகவல் தொழில் நுட்ப துறையின் செயலாளராக இருக்கும் சிவசங்கருக்கு, முதல்வரின் முதன்மை செயலாளார் என்ற பொறுப்பு கூடுதலாக கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் முதல்வர் அலுவலகத்தில்தான் அவருக்கு அதிக நேர பணி! சிவசங்கரின் நட்பு மூலம் முதல்வர் அலுவலகத்திற்குள் மிகச்சாதாரணமாக வந்துள்ளார் ஸ்வப்னா! இந்த நிலையில், 8 மாதங்களுக்கு முன்பு, தூதரக பணியில் இருந்து விலகி கேரள அரசின் தகவல் தொழில் நுட்பத் துறையில் மேனேஜராக நியமிக்கப்பட்டார். சிவசங்கரின் சிபாரிசில்தான் இந்த நியமனம் நடந்துள்ளது என சுங்கத்துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், சிவசங்கர் மட்டுமல்லாமல் கேரள அரசின் உயரதிகாரிகள், அரசியல்வாதிகள் பலருக்கும் ஸ்வப்னாவுடன் நட்பு இருப்பதையும், அவர்களுடன் விருந்து நிகழ்வுகளில் கலந்து கொண்டதையும் கண்டுப்பிடித்துள்ளனர்.
தனது நண்பரான சாஜித்துக்கு வெளிநாடுகளில் இருந்து திருவனந்தபுரம் தூதரக கிளை அலுவலகத்துக்கு வரும் பார்சல்களை விமான நிலையத்தில் சேகரிக்கும் காண்ட்ராக்ட் வேலையை அதிகாரிகள் துணையுடன் ஸ்வப்னாதான் வாங்கி தந்துள்ளார். அதன்மூலம், வெளிநாடுகளில் இருந்து, கேரளாவில் உள்ள தூதரகத்தின் அதிகாரிகளின் பெயரில் பார்சல்கள் அனுப்பி வைக்கப்படும். தங்கம் கடத்தப்படும் அந்த பார்சல்களை மட்டும் தனியாக பிரித்து அதனை ஸ்வப்னாவுக்கு அனுப்பி வைத்துவிடுவாராம் சாஜித். அந்த வகையில், வீட்டு உபயோக பொருட்கள் மூலம் தங்கத்தை வெளிநாடுகளில் உள்ள ஸ்வப்னாவின் ஏஜெண்டுகள் கேரளாவுக்கு அனுப்பி வைப்பர். இப்படித்தான் தங்கம் கடத்தல் கடந்த பல மாதங்களாக நடந்து வருகிறது என சுங்கத்துறை கண்டறிந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன!
இதற்கிடையே, கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னாவை தனக்கு தெரியாது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ள சூழலில், பினராயி விஜயன் கலந்து கொண்ட ஒரு விருந்து நிகழ்ச்சியில், அவருக்கு பின்னால் ஸ்வப்னா நிற்கும் புகைப்படமும், விருந்து நிகழ்வு முடிந்து ஸ்வப்னாவுடன் இணைந்து அவர் வெளியேறும் புகைப்படமும் வெளியாகி கேரள அரசை பரபரப்பாக்கியிருக்கிறது.
இந்த நிலையில், சிவசங்கர் மீதான பார்வையை தீவிரப்படுத்தியுள்ள சி.பி.ஐ. அதிகாரிகள், ஸ்வப்னாவை பிடிக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக அவருடன் தொடர்பில் இருந்த அதிகாரிகள், மாடல் அழகிகள் யார், யார் என்கிற பட்டியலை தயாரித்து வருகின்றனர். மேலும், கேரளாவுக்குள் நுழைந்த தங்கத்தை ஸ்வப்னா என்ன செய்தார் என்கிற தேடுதல் வேட்டையையும் முடுக்கி விட்டுள்ளது சி.பி.ஐ. ! அழகி ஸ்வப்னா கைதாகும்போது, இன்னும் பல கூடுதல் அதிர்ச்சிகளை எதிர்கொள்ளவிருக்கிறது கேரள அரசு என்கின்றன கேரளாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள். கேரள அரசு தலைமைக்கு எப்போதுமே அழகான பெண்கள் மூலம்தான் ஆபத்து உருவாகிறது. முன்பு சரிதா நாயர்! இப்போது ஸ்வப்னா!