Skip to main content

இந்தியாவின் முதல் பிரபஞ்ச அழகி... சுஷ்மிதா சென் வாகைசூடிய கதை...

Published on 21/05/2020 | Edited on 21/05/2020

90 களின் பிற்பகுதியில் பல இந்திய இளைஞர்களின் கனவுக்கன்னியாகவும், பாலிவுட் உலகின் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர் சுஷ்மிதா சென். இந்தியா பெற்ற முதல் பிரபஞ்ச அழகியும் அவரே. 1994 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தை வேண்ட சுஷ்மிதா சென், அதே ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டதையும் வென்று இந்திய இளைஞர்களின் மனத்தில் நீங்கா ஒரு இடத்தை பிடித்தார் எனலாம். 1994 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா, மிஸ் யூனிவெர்ஸ் என இரு பட்டங்களையும் அவர் வென்றிருந்தாலும், இந்த இரு வெற்றிகளுக்கும் பின்னால் நிறைந்திருக்கும் சுவாரசியமான கதைகளும், பரபர நிமிடங்களும் ஏராளம். 

 

sasa

 

1994 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸில் நடந்த மிஸ் யூனிவெர்ஸ் போட்டியில் இவர் வாகை சூடினாலும், அப்போட்டிக்குச் செல்வதற்கான நுழைவு சீட்டாக அவருக்கு அமைந்தது அதே ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டி. மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்ற சுஷ்மிதா சென், பெரிய விளம்பரங்களோ, எதிர்பார்ப்புகளோ இன்றி இறுதிச்சுற்று வரை முன்னேறியிருந்தார். இறுதிச்சுற்று நாளன்று வரை கிட்டத்தட்ட ஒட்டுமொத்த பேஷன் உலகுமே அவ்வாண்டின் வெற்றியாளராக வரப்போகிறவர் ஐஸ்வர்யா ராய் தான் என ஒரு ஏகமானதாக நம்பிக்கொண்டு இருந்தது. ஆனால் இறுதிச்சுற்றில் இந்த ஒட்டுமொத்த நம்பிக்கையையும் உடைத்தெறியும் வகையில், யாரும் எதிர்பாரா வண்ணம் மிஸ் இந்தியாவாக வாகைசூடினார் சுஷ்மிதா சென். 

இறுதிச்சுற்றில் ஐஸ்வர்யா ராய் தான் வெல்வார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், சுஷ்மிதா சென் அவருக்கு இணையான புள்ளிகளைப் பெற்றார். இதன் காரணமாக இருவருக்கும் மத்தியில் டைபிரேக்கர் கேள்வி கேட்கப்பட்டு, அதில் சிறப்பாகப் பதிலளித்த சுஷ்மிதா சென் இந்திய அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐஸ்வர்யா ராய் இரண்டாம் இடம் பிடித்தார். என்னதான் இந்திய அழகி பட்டம் பெற்றாலும், அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்ல சுஷ்மிதா சென் பல தடைகளைத் தகர்க்க வேண்டியிருந்தது. 

 

story of sushmita sen winning miss universe

 

மிஸ் இந்தியா போட்டியைத் தொடர்ந்து அதே ஆண்டு நடைபெற்ற மிஸ் யூனிவெர்ஸ் போட்டியில் கலந்துகொள்ள சுஷ்மிதா சென் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் சரியாக பிலிப்பைன்ஸ் செல்வதற்கான ஆயத்த பணிகளின் போது பாஸ்போர்ட்டை தவறவிட்டார் சுஷ்மிதா. மிஸ் இந்தியா வெற்றிக்குப் பின் மாடலிங் துறையில் மும்மரமாக இருந்த சுஷ்மிதா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான அனுபமா வர்மா என்பவரிடம் தனது பாஸ்போர்ட்டை  கொடுத்து வைத்திருந்துள்ளார். ஆனால் அனுபமா கடைசி நேரத்தில் பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதாகக் கூற, அப்போதே துளிர் விட ஆரம்பித்திருந்த சுஷ்மிதாவின் மிஸ் யூனிவெர்ஸ் கனவு ஆரம்பிப்பதற்குள் கருகியது போல ஆகிவிட்டது. ஒருபுறம் பாஸ்போர்ட் பெறுவதற்கான முயற்சிகளை சுஷ்மிதாவின் குடும்பத்தார் மேற்கொள்ள, மறுபுறம் சுஷ்மிதாவுக்கு பதிலாக மிஸ் யூனிவெர்ஸ் போட்டிக்கு இந்தியா சார்பாக ஐஸ்வர்யா ராயை அனுப்பத் தயாராகியது இந்திய நடுவர்கள் குழு. 


பரபரப்பான இறுதிக்கட்டத்தில், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அப்போதைய மத்திய அமைச்சர் ராஜேஷ் பைலட் உதவியுடன் பாஸ்போர்ட் சிக்கல்களைத் தீர்த்தார் சுஷ்மிதாவின் தந்தை. அதன்பின்னர் உலக அழகி போட்டிக்கு ஐஸ்வர்யா ராயும், மிஸ் யூனிவெர்ஸ் போட்டிக்கு சுஷ்மிதா சென்னும் செல்வதை இந்திய நடுவர்கள் குழு உறுதிப்படுத்தியது. இதனையடுத்து பிலிப்பைன்ஸ் சென்ற சுஷ்மிதா சென் அங்கு நடந்த பிரபஞ்ச அழகி போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து கலந்துகொண்ட 76 பேரைத் தோற்கடித்து இறுதியில் 1994 ஆம் ஆண்டு இதேநாளில் பிரபஞ்ச அழகி பட்டத்தைச் சூடினார். 

 

 

story of sushmita sen winning miss universe

 

இந்தியர் ஒருவர் பிரபஞ்ச அழகி பட்டத்தை சூடுவது அதுவே முதன்முறை என்பதால், பாலிவுட் முதல் ஒப்பனை பொருட்கள் தாயாரிக்கும் நிறுவனர் வரை அனைவரது கண்களும் சுஷ்மிதாவை நோக்கித் திரும்பியது. இந்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட சுஷ்மிதா பல இந்திய மொழி திரைப்படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்து தனது ரசிகர் வட்டத்தை மேலும் பலமடங்காக்கினார். பாஸ்போர்ட் இல்லாமல் பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்துகொள்ள முடியாத சூழலில் தவித்த சுஷ்மிதா 2016 ஆம் ஆண்டு, அதே பிரபஞ்ச அழகி போட்டியின் நடுவராக பணியாற்றியதே அவரின் வெற்றிக்கும், அதன்பின் உள்ள கடின உழைப்பிற்கும் சூட்டப்பட்ட கிரீடமாகப் பார்க்கலாம்.