Skip to main content

"முதலில் ரஜினிகாந்த் தன்னுடைய குடியுரிமை சான்றிதழை காட்ட வேண்டும்.." - சீமான் பேச்சு!

Published on 04/03/2020 | Edited on 04/03/2020

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நடைபெற்ற நாம் தமிழர் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய அரசை கடுமையாக சாடினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " 2014ம் ஆண்டு தேர்தலில் இந்த நாட்டிற்கு காவலாளியாக இருப்பேன் என்று நம்மிடம் வாக்கு கேட்ட பிரதமர், தற்போது நம்முடைய வீட்டிற்கு நாம் தான் உரிமையாளரா என்று நம்மிடம் சான்று கேட்கிறார். விடுதலை பெற்ற 72 ஆண்டு காலத்தில் யார் இந்தியர் என்று தெரியாமல்தான் நம்மை ஆண்டுகொண்டு இருக்கிறார்களா? நான் இந்தியனா இல்லையா என்று தெரியாமலா எனக்கு ரேசன் அட்டை கொடுத்தீர்கள். வாக்காளர் அடையாள அட்டை கொடுத்தீர்கள், ஓட்டுநர் உரிமம் கொடுத்தீர்கள்? அதனால்தான் நாட்டின் முதல் குடிமகனிடம் முதலில் குடியுரிமை கேளுங்கள், பிறகு குடிகளிடம் கேளுங்கள் என்று கூறினேன். பிரதமரிடம் முதலில் குடியுரிமை சான்றிதழை கேளுங்கள். அந்த தகவல் எப்படியோ அவருக்கு போய் உள்ளது. தற்போது யாரோ ஆர்டிஐ-யில் கேள்வி கேட்க 1955ம் ஆண்டு குடியுரிமை சட்டத்தின்படி அவரிடம் ஆவணம் இல்லை, அதனால் அவர் காட்ட தேவையில்லை என்று கூறுகிறார்கள். 

 

gh



அதைத்தான் நாங்களும் சொல்கிறோம். ஆவணம் இருந்தாலும் காட்டப்போவதில்லை. நான் முகாமுக்கு போக தயாராகிவிட்டேன். பெட்டியை தயார் செய்து விட்டேன். என் கூட நீங்கள் எல்லாம் விரும்பினால் வாருங்கள். நாம் அங்கு மகிழ்ச்சியாக இருப்போம். இப்போது திறந்த வெளியில் இருக்கிறோம். அப்போது கம்பிக்குள் இருப்போம். அவ்வளவுதான் வித்தியாசம். மதத்தையும், மானுடத்தை பிரிப்பது போல ஒரு அவலம் உலகத்தில் வேறு இருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை. அஞ்சுவதும் அடி பணிவதும் தமிழர் பரம்பரையிலேயே கிடையாது என்று தலைவர் பிரபாகரன் சொல்கிறார். அதனால் இவர்களின் சிறும்பான்மை பூச்சாண்டிகளுக்கு எல்லாம் பயப்படாதீர்கள். இந்த நாடு நம்முடையது, நான் உங்களுடன் இருப்பேன், நீங்கள் என்னுடன் இருக்க வேண்டும். இந்த நாடு நம்மோடு இருக்கும். 130 நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ஒன்றும் சிறும்பான்மை சமூகம் இல்லை. சுப்பிரமணியன் சுவாமி சிறும்பான்மை, ஹெச்.ராஜா சிறும்பான்மை, எஸ்வி சேகர் சிறும்பான்மை, இவர்கள் எல்லாம்தான் சிறும்பான்மையினர், நாம் அல்ல சிறும்பான்மை. ரஜினிகாந்த ஒரு சிறும்பான்மை இனம். அவர் ஒரே ஒரு ஆள்தான் மராட்டியர் இருக்கிறார். 

நீங்கள் வாக்களித்தாலும், வாக்களிக்கவில்லை என்றாலும் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. நான் உங்களுக்கானவன், உங்களுக்காக போராடுபவன், உங்களுக்காகவே வாழ்பவன். என் இனம் சார்ந்து யாருக்கு பிரச்சனை வந்தாலும் அதற்கு முதலில் குரல் கொடுப்பவன் நான்தான். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அது என்னுடைய இனத்தின் மாண்பு. உடலில் எங்கு காயம்பட்டாலும் முதலில் கண் அழும், அதைப் போல உலகில் தமிழர்கள் எங்கு காயம்பட்டாலும் தமிழர் மண் அழும், இதுதான் வரலாறு. நாங்கள் அழுதுள்ளோம். எல்லோரும் கல் மாவில் கோலம் போட்ட போது தமிழன் அரிசி மாவில் கோலம் போட்டார்கள். ஈ, எறும்பு கூட உணவிற்காக கஷ்டபட கூடாது என்று நினைத்தான். அதற்காக அவ்வாறு செய்தான். மதத்தை வைத்து மனிதர்களை அடையாளப்படுத்துவது என்பது உலகில் எங்கும் கிடையாது. இரண்டு அவைகளிலும் இந்த குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது, அதனால் அதனை திரும்ப பெற முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் தானே பிரதமர் போல பேசுகிறார். முதலில் ரஜினிகாந்த் தன்னுடைய குடியுரிமை சான்றிதழை காட்ட வேண்டும்" என்றார்.