Skip to main content

'பொடா' சாகுல்அமீது மரணம்!

Published on 20/09/2020 | Edited on 20/09/2020

 

poda - sahul - hameed - naam tamilar party - incident

 

நாம் தமிழர் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான 'பொடா' சாகுல்அமீது இன்று 19-ஆம் தேதி மாலை உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த அவர், தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் மரணமடைந்தார். அவரைப் பற்றி நாம் தமிழர் கட்சி ஏற்கனவே வெளியிட்ட வாழ்க்கைக் குறிப்பை இங்கே தருகிறோம்.

 

'தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது (வயது 59). இவர் பிறந்த ஊர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அந்தனப்பேட்டை எனும் சிற்றூராகும். 1974 – 1982 காலக்கட்டத்தில் திருவாரூரில் வணிக நிறுவனம் நடத்தி அங்கேயே வளர்ந்தவர் என்பதால் இவருக்கு, திருவாரூர் நன்கு அறிமுகம். தமிழ்த்தேசிய அரசியல் கருத்துகள் நிறைந்த ‘தமிழ் முழக்கம் வெல்லும்‘ இதழைப் பல ஆண்டுகளாக நடத்தியவர்.

 

ஈழத்தின் மீதும் தலைவர் மீதும் அளவு கடந்த பற்றுக்கொண்ட சாகுல் அமீது, 2002ஆம் ஆண்டு, தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் கிளிநொச்சியில் உலகச் செய்தியாளர்களுக்கு அளித்த, நேர்காணலைத் திறனாய்வு செய்வதற்காக, சென்னை ஆனந்தா திரையரங்கில் ஒரு திறனாய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக, ‘பொடா‘ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஏறத்தாழ 17 மாதங்கள் சிறைக்கொட்டடியில் வதைப்பட்டார். அதே ஆண்டின் தொடக்கத்தில் ஐயா பழ.நெடுமாறன் எழுதிய, ‘தமிழீழம் சிவக்கிறது’ எனும் நூலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகத் தனது வணிகக் கிடங்கில் வைத்திருந்ததால், தேசத்துரோக வழக்குத் தொடுக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், பல்வேறு தமிழ்த்தேசியப் போராட்டங்களிலும், தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்திய ஏராளமான போராட்டங்களிலும் பங்கேற்றுச் சிறை சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தன்னையொரு தமிழ்த்தேசியவாதியாக அடையாளப்படுத்திக் கொண்டு உறுதியாகக் களத்தில் நின்றதனால் இவரது தொழில்கள் முடக்கப்பட்டு, பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்தார். தமிழ் இனத்தின் மீதும் மொழியின் மீதும் இருந்த தணியாத பற்றினால், பெரிய இழப்புகளைச் சந்தித்தபோதும் அதனைத் துளியும் பொருட்படுத்தாது தமிழ்த்தேசியக் களத்தில் 35 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவரும் பேராளுமை.

 

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி மற்றும் இயக்கத் தலைவர்களுக்கும் நன்கு அறிமுகமானவர். இராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு விசாரிக்கப்பட்ட மிக முக்கியத் தமிழ்த்தேசியவாதிகளில் சாகுல் அமீதும் ஒருவர்.

 

நாம் தமிழர் கட்சியின் தொடக்கக் காலத்திலிருந்தே தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர். காவிரி உரிமை மீட்புப் போராட்டம், மீத்தேன்-ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் உள்ளிட்ட மண்ணின் உரிமைகளுக்கான போராட்டங்களிலும் தமிழர் வாழ்வாதாரப் போராட்டங்களிலும் நாம் தமிழர் கட்சியை முன்னின்று நடத்தியவர். மாநில ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்று கட்சி கட்டமைப்புப் பணிகளில் திறம்பட செயலாற்றியவர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கட்சிப் பொதுக்கூட்டங்களில் உரையாற்றி நாம் தமிழர் கட்சிக் கொள்கைகளைப் பரப்பியவர்.

 

Ad

 

அண்மையில் 'கஜா' புயலில் சிக்குண்டு பெரிதும் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கஜா புயல் துயர் துடைப்புப் பணிகளில் முன்னின்ற களப்பாணியாளர்களில் சாகுல் அமீதும் ஒருவர்.


 

 

 

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“வரி வாங்கி ரோடு போட்டு, திரும்ப டோல் போட்டு வசூல் பண்றாங்க” - நா.த.க வேட்பாளர்!

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Naam Tamilar candidate Ezhilarasi campaign in Sivagangai

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்குள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சட்டெரிக்கும் வெயிலில் திறந்த வாகனத்தில் நின்று கீரமங்கலத்தில் வாக்கு கேட்டு பேசும் போது, “நாட்டின் கனிமவளங்கள் எல்லாம் கொள்ளை போய்விட்டது. ஆற்றில் தண்ணீர் ஓடி ஊற்றில் தண்ணீர் குடித்த காலம் மாறிப் போய் பாட்டிலில் தண்ணீர் வாங்கி குடிக்கிறோம். மழை பெய்தால் தான் தண்ணீர் வரும் போல என்று இன்றைய நம் பிள்ளைகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நிலத்தடி நீரை, ஏரி குளங்களில் உள்ள தண்ணீரை உறிஞ்சும் தைலமரக்காடுகளை அரசாங்கமே வளர்க்கிறது. ஒட்டு மொத்த கனிம வளங்களும் காணாமல் போகிறது. எதிர்கால நம் பிள்ளைகளுக்கு எதை விட்டுச் செல்லப் போகிறோம்.

வரி வசூலிக்கும் அரசாங்கம் மக்களுக்கு கல்வி, மருத்துவம், கொடுக்க வேண்டும் ஆனால் நம்மிடம் வரியும் வாங்கிக் கொண்டு, கல்வி மருத்துவத்தையும் நம்மிடமே விற்க அனுமதிக்கிறது. நம்மிடம் வரி வசூல் செய்து சாலை போட்டு விட்டு பிறகு டோல் போட்டு அதற்கும் வரி வசூல் நடக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்” என்றார்.