Skip to main content

சர்கார் படத்தில் மத்திய அரசை விமர்சிக்காதது ஏன்... - பழ.கருப்பையா பேட்டி

Published on 09/11/2018 | Edited on 09/11/2018

EXCLUSIVE : கணவனை டாஸ்மாக்கில் குடிக்கவைக்கிறீர்கள், மனைவிக்கு மிக்சி, கிரைண்டர் இலவசமாகத் தருகிறீர்கள்! - பழ.கருப்பையா பேட்டி  

பேட்டியின் தொடர்ச்சி...

 

pazha karupaiah



இந்தியா போன்ற ஒரு நாட்டில் தமிழகம் வளர்ந்திருக்கிறதே?

தமிழகம் வளர்ந்திருக்கிறது என்று இவர்கள் கூறுவது முதலாளிகளைத்தான். இருப்பவர்களுக்கும், இல்லாதவர்களுக்குமான இடைவெளி இன்னும் அப்படியேதான் இருக்கிறது. இந்தியாவில் 50 குடும்பங்கள் வாழ 500 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்றம் செல்கின்றனர்.

மத்திய அரசை விமர்சிக்கும் ஒரு காட்சியோ, வசனமோ இடம்பெறவில்லையே?

நேரத்தை கவனத்தில் கொண்டே படம் எடுக்க முடியும். அனைத்தையும் விமர்சித்தால் பிறகு படம் 4 மணிநேரம் ஓடும். எனவே சர்க்கார் 2 வந்தால் அதில் பேசப்படலாம். ஆனால் அது வருமா என்பது பற்றி எனக்கு தெரியாது. பேசாததை விமர்சிக்காமல், பேசியது சரியா என விவாதியுங்கள். நாட்டின் அரசியலை இரண்டரை மணிநேரத்தில் இவ்வளவு சொன்னதே பெரிய விஷயம். எல்லா ஜாதியிலிருந்து வரக் கூடிய எல்லா அரசியல்வாதிகளும் மோசமானவர்களாக இருக்கிறார்கள், அதுதான் ஜனநாயகத்தின் வீழ்ச்சி.

தமிழகத்தில், காமராஜர் ஆரம்பித்து ஜெயலலிதா வரை எந்த முதல்வருக்காவது ஜாதி அடையாளம் உள்ளதா?

ஜாதி அடையாளம் தமிழ்நாட்டில் இல்லை, அது இல்லாமல்தான் எம்.ஜி.ஆர் முதல் ரஜினி வரை அரசியலுக்கு வர முடிகிறது. தமிழகம்  இதில் பெருந்தன்மை வாய்ந்தது. ஆனால் ஜாதி அடையாளத்தோடு ஒருவர் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே சில சமயம் சிறுபான்மையினர் உருவாக்கப்படுகிறார்கள், அயல் மனிதர்கள் முதலமைச்சர்களாக ஆக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு ஜாதி அரசியல்வாதிகள் மத்தியில் உண்டு. கட்சிகள் இப்படித்தான் இருக்கின்றன, அரசியல்வாதிகள் இப்படித்தான் இருக்கிறார்கள் என காட்டுவதே சர்காரின் மைய கரு.

நீங்களே ஒரு பேட்டியில் சொன்னீர்கள், விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என்று. ஒருவேளை அதுதான் சர்காரின் நோக்கம் அதுவாக இருக்குமோ?

அவர் வரக்கூடும் என்று அவர் என்னிடம் பேசிய பேச்சுக்களில் இருந்துதான் கூறினேனே தவிர, அவரே என்னிடம் வரப்  போகிறேன் என்று சொல்லவில்லை.

நிகழ்கால அரசியல் பற்றி விஜயின் கருத்து என்ன? உங்களிடம் பகிர்ந்துள்ளாரா? 

தற்பொழுது தமிழகத்தின் அரசியல் நிலைமை சரியில்லை என கூறுவார். நான் சொன்னது போல, புழுக்கம் ஏற்படும்போது மழை உண்டாவது போல இதற்குப் பின் அரசியலில் ஒரு நல்ல தலைவர் உருவாகுவார். எடப்பாடி வரும்போது விஜய் வருவதில் என்ன தவறு? இப்பொழுது முதல்வர், துணை முதல்வராக இருப்பவர்கள் என்ன படித்தார்கள், என்ன போராட்டங்கள் செய்தார்கள்? அம்மாவை சிறையில் வைத்த பொழுது தர்மபுரியில் பஸ்சை கொளுத்தினார்கள். அம்மா காசு வாங்கியதற்கு சிறையில் அடைக்கப்பட்டார், இதற்கு ஏன் ஊரில் உள்ள பஸ்களை எல்லாம் கொளுத்த வேண்டும். இதெல்லாம் ஒரு போராட்டமா? 3 பெண்கள் உயிருடன் கொளுத்தப்பட்டனர். நான் கேட்கிறேன், அம்மாவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதற்கு அந்த 3 பெண்கள்தான் பொறுப்பா? அவர்களை பொறுத்தவரை அப்படி செய்தால் கட்சியில் நம்மை பாராட்டுவார்கள், முன்னேற்றுவார்கள் என்ற அடிப்படையில் தான் இவ்வாறு செய்கிறார்கள். இதுபோன்ற  எண்ணம் உள்ள அரசியல் தோற்கடிக்கப்பட வேண்டும்.

வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியது பற்றி?

எல்லாத்துலயும் ஊழல் இருக்கு என்பதுதானே நிஜம். பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை, விண்ணப்பத்துடன் கவரும் கொடுத்தால்தான் அது கிடைக்கும். சமீப நிகழ்வுகள் குறித்து நியாயமாக படம் எடுப்பது தவறில்லையே. இது போன்ற கட்சிகள் ஆட்சியில் இருக்கக் கூடாது என்பதை மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். கோமலவள்ளி எனப்பெயர் வைத்ததுக்கு பிரச்சனை செய்கிறார்கள், கோட்ஸேவை மகாத்மா என கூறினால்தான் தவறு. லஞ்சம் வாங்கி அதற்காக 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் ஜெயலலிதா. தமிழக முதல்வர்களிலேயே இப்படி தண்டனை பெற்றவர் இவர் மட்டுமே. உயிரோடு இருந்தால் சசிகலாவோடு பரப்பன அக்கிரகார சிறையில் இருந்திருப்பார். இங்கு நடப்பதுதான் படத்தில் காட்டப்பட்டுள்ளது. பணம் இருந்தால் எந்தப் பதவியை வேண்டுமானாலும் வாங்கலாம்.

சரி நீங்கள் சொல்வதை வைத்தே பார்த்தால், உங்களைப் போல, நல்லக்கண்ணு அய்யா போல பலரும் அப்படி இல்லையே?

நான் அவ்வளவு நல்லவன் கிடையாது. ஆனால் எனக்கு இறை பயம் அதிகம். சட்டத்தைப் பார்த்து எனக்கு பெரிய பயமில்லை. காவல்துறை முதல் சில நீதிபதிகள் வரை யாரையாவது விலைக்கு வாங்கி தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் கடவுள் மேலுள்ள பயத்தால் மட்டுமே நான் அவ்வாறு தவறுகள் எதுவும் செய்யாமல் இருக்கிறேன்.