தமிழக மக்களவைத் தொகுதிகளில் வடசென்னை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வட சென்னை மக்களவைத் தொகுதியில் திருவொற்றியூர், ஆர்.கே.நகர், ராயபுரம், பெரம்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இதவரை வட சென்னை மக்களவைத் தொகுதி உருவானதிலிருந்து நடைபெற்ற தேர்தல்களில் திமுக 11 முறையும், காங்கிரஸ் 3 முறையும், அதிமுக 1 முறையும் வென்றுள்ளன. இந்த முறை வடசென்னை மக்களவைத் தொகுதியில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. திமுக சார்பில் எம்.பி கலாநிதி வீராசாமியும், அதிமுக சார்பில் ராயபுரம் மனோவும் களம் இறங்குகின்றனர். மற்றொரு புறம் நாம் தமிழர் கட்சி சார்பில் அமுதினியும், பாஜக சார்பில் பால் கனகராஜூம் போட்டியிடுகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சீமான் என முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில், வட சென்னை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராயபுரம் மனோ, தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறார். வட சென்னை மக்களுக்கு அறிந்த முகம் என்பதால் ராயபுரம் மனோவிற்கு செல்லும் இடங்களில் எல்லாம் அமோக ஆதரவு இருப்பதாக அவரது கட்சியினர் கூறுகின்றனர். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவின் இயற்பெயர் மனோகர். வட சென்னையின் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர். பி.டெக் இளநிலை முடித்த மனோகர் எம்.டெக், எம்பிஏ படிப்பை நிறைவு செய்தார். அதன் பிறகு அரசியலில் நுழைந்த மனோகர் வட சென்னை மக்களின் பிரச்சனைகளுக்கு உரிமை குரலாக இருந்து வந்தார். இதனிடையே, காங்கிரஸ் கட்சியில் இணைந்த மனோகர் வட சென்னை பகுதிகளில் கட்சியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவினார். அதன் மூலம், காங்கிரஸ் கட்சியில் சென்னை மாவட்டத்தில் முக்கியத் தலைவராக மாறிய மனோகர் ராயபுரம் மனோவாக அரசியலில் வளர்ச்சி அடைந்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்த ராயபுரம் மனோ மூப்பனாரின் தீவர ஆதரவாளராக இருந்தார். காங்கிரஸ் கட்சியிலிருந்து மூப்பனார் பிரிந்து தமாகா உருவானபோது ராயபுரம் மனோவும் தமாகாவில் இணைந்தார். மூப்பனார் மறைவுக்குப் பின்னரும் தொடர்ந்து தமாகாவிலேயே இருந்த அவர் பின்னர் ஜி.கே.வாசன் காங்கிரஸுக்குத் திரும்பியபோது தானும் காங்கிரஸுக்குத் திரும்பினார். காங்கிரஸில் வாசனின் முக்கிய ஆதரவாளராக விளங்கிய அவர், வாசன் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். பின்னர் வாசன் மீண்டும் காங்கிரஸிலிருந்து வெளியேறிய போதும், மனோ காங்கிரஸிலேயே இருந்தார்.
சென்னையில் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்களுக்கு ஆட்களை அழைத்து வருவது, விழாக் கூட்டங்கள் நடத்துவது எனக் காங்கிரஸ் கட்சியில் பரபரப்பாக களத்தில் இயங்கிவர்களில் ராயபுரம் மனோவும் ஒருவர். சத்தியமூர்த்தி பவனில் 150 அடி உயர காங்கிரஸ் கட்சிக் கொடி அமைய முக்கிய பங்காற்றியவர் ராயபுரம் மனோ. இப்படி, சென்னையில் காங்கிரஸ் கட்சியின் அடையாளமாக மாறிய ராயபுரம் மனோ கடந்த 2019 ஆம் ஆண்டு கட்சியில் இருந்து விலகினார். அரசியலிலிருந்து சிறிது காலம் விலகி நிற்க விரும்புகிறேன் என கூறி அறிக்கை வெளியிட்டு கனத்த இதயத்தோடு விலகுவதாக அறிக்கையில் தெரிவித்தார்.
ஆனால், அரசியலில் இருந்து விலகினாலும் மக்கள் நலப்பணி தொடரும் என அறிக்கை தெரிவித்தது போல தொடர்ந்து வட சென்னை மக்களுக்கு ராயபுரம் மனோ குரல் கொடுத்து வந்தார். தன் பகுதி மக்களின் இன்ப துன்ப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு எப்போதும் பகுதி மக்கள் குரலாகவே இருந்து வந்தார். அதன் பிறகு அதிமுக சென்ற ராயபுரம் மனோ அங்கேயேயும் வட சென்னை மக்களின் குரலாக ஒலித்தார். தலைவர்கள் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில் ஏழை எளியோருக்கு உணவு வழங்குவதை இன்றளவும் தனது அரசியல் பயணத்தில் தொடர்ந்து வருகிறார் ராயபுரம் மனோ.
வட சென்னை பகுதியின் முக்கிய நபராக அதிமுகவிலும் ராயபுரம் மனோ திகழவே, தலைமை அவருக்கு சீட் வழங்கி இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். களத்தில் வட சென்னை பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளும் ராயபுரம் மனோ, தான் இருமுறை மாமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றியது, அதிமுக அரசின் 10ஆண்டு சாதனைகள் மற்றும் வட சென்னையில் அதிமுக அரசால் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் என அனைத்தையும் பட்டியலிட்டு வாக்கு சேகரித்து வருகிறார்.
மத்திய, மாநில அரசுகள் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி இரட்டை இலைக்கு வாக்குகளாக மாறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், ரயில்வே முனையம் அமைப்பது, போட்டித் தேர்வு பயிற்சி மையம் அமைத்தல், ரயில்வே கடவுப் பாதையில் மேம்பாலம் அமைப்பது உள்ளிட்ட 30 வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்து வருகிறார். இதுவரை திமுகவின் கோட்டையாக வட சென்னை மக்களவைத் தொகுதி இருக்கும் நிலையில, ராயபுரம் மனோ வரலாற்றை மாற்றி எழுதுவரா? என்ற கேள்விக்கு தேர்தல் முடிவு தான் பதில் சொல்லும்.