
குளுகுளு மாவட்டமான நீலகிரி தற்போது ஆளுங்கட்சியின் கோஷ்டி பூசலால் கொதித்துக் கொண்டுள்ளது. ஊட்டி, குன்னூர், கூடலூர் சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட நீலகிரி மாவட்டம் ஆளுங்கட்சி தரப்பில் பல ஆண்டுகளாக திமுக மாவட்டச் செயலாளராக இருந்த முபாரக் மீது புகார்கள் சென்றதால், கடந்த மாதம் அதிரடியாக மாவட்டச் செயலாளர் பதவியை பறித்து அதே படுகர் சமூகத்தைச் சேர்ந்த கே.எம்.ராஜூவுக்கு திமுக தலைமை பதவி வழங்கியது.
நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை திமுக தரப்பில் முபாரக் கோஷ்டி மற்றும் குன்னூர் சட்டமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் கோஷ்டிக்கும் கடுமையான மோதல் இருந்து வந்தது. இந்த நிலையில் முபாரகின் திமுக மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதிலிருந்து தற்போது நீலகிரி மாவட்ட திமுகவில் பல கோஷ்டிகள் முளைத்துள்ளது. திமுக தரப்பில் ஏற்கனவே கோஷ்டி பூசல் இருந்ததால் ஊட்டி சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு கணேஷ் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த முறை திமுகவுக்கு ஊட்டி சட்டமன்றத் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று உடன்பிறப்புகள் அதற்கான காயை நகர்த்தி வருகின்றனர். இந்த நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என்று முபாரகின் ஆதரவளராக இருந்த மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார் தற்போதைய மாவட்டச் செயலாளர் உடன் நெருக்கம் காட்டி தனி கோஷ்டி உருவாக்கி வருகிறாராம்.

அதேசமயம் ஊட்டி நகர செயலாளராக இருக்கும் ஜார்ஜ்(முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரனின் ஆதரவாளர்) தனது கோஷ்டிகளுடன் காய் நகர்த்தி வருகிறார். இது ஒரு புறம் இருக்க முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்த காந்தல் ராஜன் மகன் இளங்கோவன் அவரின் ஆதரவாளர்களுடன் வலம் வருகிறார். தற்போதைய குன்னூர் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் மீது தலைமையில் அதிருப்தியில் உள்ளதால் கடந்த ஆண்டு அவரின் பதவி பறிக்கப்பட்டது. இந்த முறை குன்னூர் சட்டமன்றத் தொகுதி சீட்டு வாங்க இவரின் ஆதரவாளர்கள் மூலம் கோஷ்டி அரசியல் செய்ய, முன்னாள் ஒன்றிய சேர்மனான் சுனிதாவுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று ஒரே கோஷ்டியாக செயல்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மற்றும் குன்னூர் சட்டமன்றத் தொகுதி கோஷ்டி பூசல் கொந்தளித்துக் கொண்டுள்ளதை விட, கூடலூர்(தனி) சட்டமன்ற தொகுதியில் திமுக பல கோஷ்டிகள் ஒருபுறம் இருக்க, ராயன் (எ) ராயன் காக்கா என்ற காண்ட்ராக்டர் கையில் திமுக உள்ளது வியப்பை அளிக்கிறது. இந்தத் தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் மாஜி எம்எல்ஏ திராவிட மணிக்கு சீட்டு கிடைக்காமல், தனது ஆதரவாளரான காசிலிங்கத்திற்கு சீட்டுத் தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும், தனது எதிர் கோஷ்டி ஆன ராமச்சந்திரனுக்கு குன்னூரில் சீட்டு வழங்கியதை போல, தனது ஆதரவாளரான காசி லங்கத்திற்கு கூடலூர் சட்டமன்றத் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று அப்போதே இதே மா.செ வான முபாரக் கட்சித் தலைமையில் பேசி சீட்டை வாங்கி, கடந்த 2021 தேர்தலில் கோஷ்டி பூசலால் அதிமுகவின் பொன். ஜெயசீலன் வெற்றி பெற்றார்.
இந்த முறையும் சீட்டை வாங்க காசிலிங்கம் தனது ஆதரவாளர்களுடன் வலம் வர, மாஜி எம்.எல்.ஏவான திராவிட மணி தனது ஆதரவாளர்களுடன் வலம் வருகிறார். ஊட்டி, குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம், அவிநசி, பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய நீலகிரியின்(தனி )நாடாளுமன்ற உறுப்பினராக ஆ.ராசா உள்ளார். அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி பொது தொகுதியாக மாற இருக்கிறது. இதனால் கூடலூர்(தனி) சட்டமன்றத் தொகுதியில் தனது மைத்துனர்(அக்கா மகன்) பரமேஷ் குமாருக்கு திமுகவில் சீட்டு வாங்கி, இந்த தொகுதியில் வெற்றி பெற செய்து அமைச்சராக்கி தனது செல்வாக்கை நீலகிரியில் நிலைநிறுத்தக் காய் நகர்த்தி வருகிறார்.
தலைமையின் பவர்ஃபுல்லாக வளம் வரும் இவர், பெரம்பலூரில் இருந்து இங்கு பதவி வகிப்பது உ.பிகள் மத்தியில் உள்ளுக்குள் புகைந்து கொண்டுள்ளது. அதே சமயம் ஆ.ராசாசுக்கு தனி கோஷ்டி இருந்தாலும் முபாரக் கோஷ்டி மற்றும் ராமச்சந்திரன் கோஷ்டி அடங்கி தான் செல்லும். ஆனால் மறைமுகமாக கூடலூர் தொகுதியில் திமுகவினரை கையில் வைத்துக்கொண்டு ஏ கிளாஸ் காண்ட்ராக்டரான ராயன் வலம் வருகிறார். அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினராக இருந்த ராயன், கொடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய சாஜுடன் நெருக்கமானவர். முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் தீவிர ஆதரவில் கடந்த அதிமுக ஆட்சியில் பல கோடி ரூபாய் காண்ட்ராக்ட் பணியைச் செய்து வந்தார்.
சில புகாரால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராயன் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அப்போதைய மாவட்டச் செயலாளர் முபாரக் மூலம் திமுகவில் சேர்ந்தார். இவர் திமுகவில் சேர்ந்தவுடன், கடந்த ஆட்சியில் சர்ச்சையில் சிக்கி தேவாலய பகுதியில் செயல்பட்டு வந்ததார். கூடலூர் தொகுதிக்கு உட்பட்ட நெல்லியாலம் நகராட்சி, தேவர் சோலை, ஊவேலி நடுவட்டம் உள்ளிட்ட பகுதியில் உள்ளாட்சி சேர்மன் மற்றும் தலைவராக செயல்பட்டு வரும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களை தொடர்ச்சியாக வஞ்சித்து வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது.

அப்போதைய மாவட்டச் செயலாளராக இருந்த முபாரக் செல்வாக்கால் கூடலூர் பகுதியில் பல கோடி ரூபாய் காண்ட்ராக்ட் பணியை எடுத்து சரியாக வேலை செய்யவில்லை என்ற புகார் எழுந்தது. இதனால் நெல்லியாலம் நகராட்சி மன்ற சேர்மன் சிவகாமி இவரின் காண்ட்ராக்ட் பணியை பிளாக் லிஸ்டில் கொண்டு வந்தார். பிறகு இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் இருந்த நிலையில் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இவர் நீக்கப்பட்டார். இதனால் நெல்லியாளம் நகராட்சி சேர்மமனான பணிகர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த சிவகாமிக்கு பல ஜோடிப்பு வழக்குகளை பதிவு செய்து பதவியை பறிக்க சேர்மன் சிவகாமிக்கு எதிரான செயலில் ஈடுபட்டு வருகிறார்.
பட்டியல் இன வகுப்பைச் சார்ந்த சேர்மன் சிவகாமி கணவன இழந்து சொந்த வீடு கூட இல்லாமல், தனது குழந்தையுடன் வசித்து வருகிறார். கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் நெல்லியாலம் நகராட்சி பழங்குடி சமூக பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் பழங்குடி வகுப்பை சேர்ந்த சிவகாமி திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முன்னாள் சேர்மனான காசிலிங்கம் சிவகாமியிடம் தவறாக நடக்க முயன்ற சம்பவத்தை ரெக்கார்ட் செய்து எம்.பி கனிமொழியிடம் கூறியதால் சிவகாமியை பழிவாங்க ராயனுடன் சேர்ந்து கொண்டார். நெல்லிவளம் நகர செயலாளர் மு. சேகரனும், கவுன்சிலர் ஆலனும் சேர்ந்து கொண்டு நகராட்சி சேர்மன் சிவகாமி உட்பட பட்டியல் சமூகத்தைச் சார்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளனர்.
முதலில் சேர்மன் சிவகாமிக்கு ஆதரவாக இருந்த சேகரன், ஆலன் பண செல்வாக்கால் ராயன் வசம் அடைக்கலம் ஆனார்கள். பிறகு சேர்மன் சிவகாமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர இந்த நால்வர் குழு பல சதி வேலைகளை செய்துள்ளது. இந்த சதி வேலைக்கு சொந்த கட்சிக்கு எதிராக ஆளுங்கட்சியை சேர்ந்த காண்ட்ராக்டர் ராயனுடன் கைகோர்த்துக் கொண்டனர். இதற்கு உடந்தையாக ஆணையர் முனியப்பனும் அவர்களுக்கு ஆதரவாக ஆளும் கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இந்த விவரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவிடம் சிவகாமி எடுத்துச் சொல்லவே மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவியாவிடம் பேசி நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறுத்தி வைத்தனர்.
ராசாவின் மைத்துனர் காண்ட்ராக்டராக இருந்தாலும் ராயனின் செல்வாக்கால் பரமேஷ் குமாருக்கு பெரிய அளவில் கான்ட்ராக்ட் வேலைகள் வழங்கவில்லை. மேலும் சேர்மன் சிவகாமிக்கு மர்ம நபர் மூலம் ஒரு பாக்ஸை அனுப்பி வைத்து அதில் பணத்தை வைத்து விஜிலன்ஸ் அதிகாரிகள் மூலம் அவர் மீது வழக்கு ஜோடிக்கப்பட்டு எஃப் ஐ ஆர் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதை சாக்காக வைத்துக்கொண்டு கட்சியினரைத் தூண்டிவிட்டு சேர்மன் சிவகாமியை பதவி விலக ஒரு கோஷ்டியை உருவாக்கி வைத்துள்ளார் ராயன். மேலும் கூடலூர் பகுதியில் காண்ட்ராக்டர் யூனியன் ஒன்றுக்கு ராயன் மற்றொன்று மறைமுகமாக ராயனனின் ஆதரவாளர் ஒரு யூனியனுக்கு தலைமை வகிக்கின்றனர்.

சிண்டிகேட் மூலம் ராயன் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் ரூ.50 கோடிக்கு மேல் காண்ட்ராக்ட் பணியை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகளாக உள்ளவர்களுக்கு இதுவரை வேலைகளுக்கான சரியான தொகை சென்றடைவதில்லை என்று கூறப்படுகிறது. ராயன் வைத்தது தான் கூடலூர் திமுகவில் சட்டமாக உள்ளது என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
ஆ.ராசாவின் மைத்துனர் பரமேஷ் குமாருக்கு எக்காரணத்தைக் கொண்டும் கூடலூர் சீட்டு கிடைக்கக்கூடாது என்ற நோக்கத்தில் தனக்கென ஒரு கோஷ்டியை பசையுடன் வைத்துள்ளார். கட்சியில் பவர்ஃபுல்லான எம்.பி. யான ஆ ராசாவுக்கு டப் கொடுக்கும் ராயன் பட்டியல் சமூகத்தை சார்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளை அடிமையாகவே வைத்துள்ளதாக குமுறி வருகின்றனர். தற்போது மா.செ பதவி வழங்கப்பட்டுள்ள கே.எம். ராஜு இந்த கோஸ்ட் பூசலில் சிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். முதல்வருக்கு ரிப்போர்ட் கொடுக்க வேண்டிய உளவுத்துறை செயலற்று கிடைக்கின்றது என்கின்றனர் நீலகிரி மாவட்ட நிலமையை அறிந்த அரசியல் விமர்சகர்கள்.