Skip to main content

அ.தி.மு.க. ஒருமுறை கூட ஜெயிக்காத தொகுதி !

Published on 21/03/2019 | Edited on 21/03/2019

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் 2016-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் கலைஞரை ஜெயிக்க வைத்த தொகுதி, இதுவரை நடந்த தேர்தல்களில் அ.தி.மு.க. ஒருமுறை கூட ஜெயிக்காத தொகுதி திருவாரூர். கலைஞர் மறைவுக்குப் பின் இடைத் தேர்தல் தேதியை அறிவித்து, பின்னர் ரத்து செய்து, தேர்தல் ஆணையம் திருவிளையாடல் நடத்திய தொகுதியும் இதுதான். 
 

poondi kalaivanan

இப்போது ஆளும்கட்சி சார்பில் மாஜி அமைச்சரான நாகபட்டினத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் களம் இறங்குகிறார். தி.மு.க.வில், தேர்தல் ரத்து செய்யப்படுவதற்கு முன்னால் அறிவிக்கப்பட்ட பூண்டி கலைவாணனைத்தான் இப்போதும் வேட்பாளராக அறிவித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். தினகரனின் அ.ம.மு.க.விலோ மா.செ. எஸ்.காமராஜ் களம் இறங்குவது உறுதியாகிவிட்டது. 

 

"திருவாரூர் தொகுதிக்குள் ஆளே கிடைக்காத மாதிரி, நாகபட்டினத்திலிருந்து ஜீவாவை இங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்களே என்ற சலசலப்புச் சத்தம்  அ.தி.மு.க.வில் பலமாக கேட்கிறது. “திருவாரூர் நகரச்செயலாளரா இருக்கும் ஆர்.டி.மூர்த்தி ரொம்ப வருஷமா சீட் கேட்டு போராடிக்கிட்டிருக்காரு. ஆனா அவருக்கு உடம்பு சரியில்லைன்னு சப்பைக் காரணத்தைச் சொல்லி ஆப்பு வச்சிட்டாரு  அமைச்சர் காமராஜ். அதேபோல் கடந்தமுறை கலைஞரை எதிர்த்துப் போட்டியிட்ட பன்னீர்செல்வமும் சீட் கிடைக்காத அதிருப்தியில் இருக்கிறார். இருந்தாலும் தி.மு.க. கோட்டை என்ற இமேஜை மாற்றுவதற்காக 200 கோடியை இறக்கப் போறாங்க ளாம்''’என்கிறார்கள் திருவாரூர் நகர ரத்தத்தின் ரத்தங்கள். 
 

kamaraj

"கலைஞர் மறைந்த உடனேயே சுவர்களில் குக்கர் சின்னத்தை வரைந்து தேர்தல் வேலையை ஆரம்பித்தது அ.ம.மு.க.தான். இப்போதுவரை களத்தில் சுறுசுறுப்பாக வரிந்து கட்டுகிறது. அ.தி.மு.க.வின் வேட்பாளர் தேர்வுதான் எங்களுக்கு பெரிய ப்ளஸ்'' என்கிறார்கள் அ.ம.மு.க.வினர்.  

 

"கலைஞரின் கோட்டை என்ற கணக்குடன் கோதாவில் குதித்திருக்கிறார் மா.செ. பூண்டி கலைவாணன். "கட்சிக்கும் கலைஞருக்கும் உள்ள செல்வாக்கு இவரது பலம். தனிப்பட்ட சிக்கல்களே பலவீனம்' என்கிறார்கள் உ.பி.க்கள். 20-ஆம் தேதி திருவாரூரில் பிரச்சாரத்தைத் தொடங்கும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், "எல்லாவற்ரையும் சரி செய்துவிட்டுப் புறப்பட்டால் தான் சரிப்பட்டுவரும்'' என்கிறார்கள். 

 

"தலைவனே!', "போராளியே!' என பூண்டி கலைவாணனுக்கு உ.பி.க்கள் வாழ்த்து மழை பொழிந்துகொண்டிருக்கிறார்கள். ஆளும் தரப்பிலோ, நகராட்சி அலுவலகத்திற்கு மக்களை வரவழைத்து, பேங்க் அக்கவுண்ட் நம்பரையும் செல்போன் நம்பரையும் வாங்கிக் கொண்டு கரன்சி மழைக்கு மேகமூட்டத்தை உருவாக்கு கிறார்கள். கலைஞரின் தொகுதியை தக்க வைக்க சகல அஸ்திரங்களையும் தி.மு.க. பயன்படுத்துமா?