Skip to main content

என் ஈரக்கொலையே நடுங்கிப் போயிடுச்சி... கதறிய தாய்..! - உயிருக்கு தீ வைத்த ஃபேஸ்புக் காதல்! -மூடி மறைக்கும் போலீஸ்!

Published on 13/02/2021 | Edited on 13/02/2021

 

dddd

 

முகநூலில் ஏற்பட்ட காதல், மண விழாவில் முடியாமல் மரணத்தில் முடிந்துள்ளது. சென்னை எம்.கே.பி. நகரில் வசித்துவருவர் ரோசி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனது பள்ளிப் பருவம் முதலே முகநூலைப் பயன்படுத்தி வந்துள்ளார். அதில் அறிமுகம் ஆனவர் ஏ.ஆர். போலீசான மகேஷ். சென்னை புழல் சிறையில் சூப்பிரண்டென்ட் செந்தில்குமாரிடம் கன்மேனாக பணிபுரிந்து வருகிறார்.

 

முகநூல் மூலமாக மகேஷ் பேச ஆரம்பித்ததும் ரோசியும் பேச ஆரம்பித்துள்ளார். "எனக்கும் போலீஸ் ஆகணும் என்பதுதான் ஆசை'' என்று சொல்லியுள்ளார். மகேஷும் "உங்களை ஐ.பி.எஸ். ஆகவே ஆக்கிவிடலாம்'' என்று சொல்ல... தொடர்ந்த உரையாடல் காதலானது. திருமணம் செய்துகொள்வதாக முடிவெடுத்து காமத்தில் முடிந்து, கரு வளர்ந்துள்ளது. மாத்திரைகளால் கரு கலைக்கப்படவே, அடுத்தடுத்து இன்ப விளையாட்டுகள் தொடர்ந்து, மீண்டும் கரு உருவானது. இந்தமுறையும் கலைக்கச் சொல்லி மகேஷ் வலியுறுத்தியபோதுதான் ரோசிக்கு சந்தேகம் வந்தது. சண்டையும் வலுத்தது.

 

அக்டோபர் மாதம் புளியந்தோப்பு டி.சி. ராஜேஷ்கண்ணன் அவர்களைச் சந்தித்து புகார் கொடுக்கவே, அவர் எம்.கே.பி. நகர் ஆல் வுமன் போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் மலர் செல்வியிடம் புகாரை விசாரிக்கச் சொல்லியுள்ளார். 16 வயது பெண்ணை ஏமாற்றியது பற்றி விசாரிக்க வேண்டிய காவல்துறை, இருவரையும் அழைத்து கட்டப்பஞ்சாயத்து மட்டுமே செய்தது.

 

மனம் நொந்துபோன ரோசி, நவம்பர் 19-ம் தேதி தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டார். பிறகு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்ற முடியாமல் 22-ம் தேதி இறந்துபோனார். தன் மகள் இறப்புக்குக் காரணமான மகேஷை கைதுசெய்யச் சொன்ன தாயை, காவல்துறையே பேரம் பேசி மிரட்டி அனுப்பியுள்ளது. பணமும், புழல் சிறை அதிகாரியின் பின்புலமுமே மகேஷை காப்பாற்றியுள்ளது.

 

dddd

 

புழல் சிறையில் மகேஷ் பற்றி விசாரித்தபோது, "அதிகாரியின் பெயரைச் சொல்லி அவன் போடும் ஆட்டம் கொஞ்சநஞ்சமில்லை. விதிகளை மீறிச் செல்ஃபோன் எடுத்து வருவான், கேட்டா சார் பெயரைச் சொல்லி மாஸ் காட்டுவான்'' என்றார்கள்.

 

இதுதொடர்பாக ரோசியின் தாயார் எலிசெபத் கூறுகையில், "பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, கரோனா காலம் என்பதால் பள்ளி செல்ல முடியாமல் வீட்டிலே இருந்து வந்தாள். சில நாட்களாவே கோபமாகவும், சோறு, தண்ணிகூட உண்ணாமல் கிடந்தாள். நான் கேட்டபோதுகூட எதையும் சொல்லாமலே இருந்து வந்தாள். திடீரென ஒருநாள் இரவு தீவைத்துக்கொண்டு என் பின்னாடி வந்து நின்றாள். என் ஈரக்கொலையே நடுங்கிப் போயிடுச்சி. அதன்பிறகு அவள் ஆஸ்பிட்டலில் சொன்ன வாக்குமூலத்திற்குப் பிறகுதான் இந்த விஷயங்கள் எனக்கே தெரிய வந்தது. அதன்பிறகு எம்.கே.பி. நகர் போலீஸ் ஸ்டேசனில் என் பெண்ணின் சாவுக்குக் காரணமாக இருந்த அந்தப் பையனைக் கைது செய்யுங்க என்று 15 நாள் போராட்டத்திற்குப் பிறகே, இன்ஸ்பெக்டர் ரமேஷ் எங்களை அழைத்து ‘நடந்தது நடந்து போச்சு... என்று ஒரு லட்சம் கொடுக்கிறாங்களாம். அதை வாங்கிட்டு பொழப்பை பாரு' என்று சொன்னாரு. நானும் "2 லட்சம் தருகிறேன், அந்த பையனை இங்கே கொளுத்திக்கச் சொல்லுங்க'' என்று சொன்னேன். அதற்கு இன்ஸ்பெக்டர் "இந்தாம்மா எங்களால் வழக்கையே மாத்திப் போட முடியும், கிளம்பு என மிரட்டி அனுப்பிவிட்டார்'' என்றார்.

 

இதுதொடர்பாக பேசிய இன்ஸ்பெக்டர் ரமேஷ், "இந்த வழக்கை சந்தேக மரணம் எனப் பதிவு செய்துள்ளோம். மேலும் செக்சன் 305, தற்கொலைக்குத் தூண்டுதல் என மாற்ற முடியுமா என்று பார்த்து வருகிறோம். அந்தப் பையன் காதலித்தது உண்மைதான். ஆனால் கருவைக் கலைத்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. கிடைத்தால் நிச்சயம் கைது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

 

இது தொடர்பாக பேசிய வழக்கறிஞர் பாலா... "இவர்கள் வெறுமனே தற்கொலை வழக்காக (செக்சன் 174) பதிவு செய்துள்ளனர். 16 வயது சிறுமியைக் காதலித்து திருமணம் செய்துகொள்வதாக பொய்யாகப் பேசி, தன் இச்சைக்குப் பயன்படுத்திக்கொண்டு, தற்போது ஏமாற்றியதால்தான் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டதாக வாக்குமூலம் இருக்கிறது. ஏன் இவர்கள் போஸ்ட்மார்ட்டம் செய்யவில்லை என, என்னிடமே ஆதாரத்தைக் கேட்டபோது, நானே அனைத்து ஆதாரத்தையும் கொடுத்தும்... எந்த வழக்கும் பதிவு செய்யவே இல்லை, முழுக்க மூடி மறைக்க நினைக்கிறார்கள்'' என்றார்.

 

இது தொடர்பாக மகேஷிடம் கேட்ட போது, பேச மறுத்துவிட்டார்.

அநீதியைக் கண்டு அதிர்ந்து போகாமல், அவர்களுக்குச் சாதகமாக செயல்படும் காவல் துறையை யார் தட்டிக்கேட்பது.

 

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.