Action by teachers on Students wrote 'Jai Sri Ram' in the answer sheet

உத்தரப் பிரதேசமாநிலம், ஜான்பூர் பகுதியில் வீர் பகதூர் சிங் புர்வன்சால் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பல்கலைக்கழத்தில் பி-பார்ம் பயின்ற முன்னாள் மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்கள் எழுதிய தேர்வில் அவர்களை தேர்ச்சி பெற வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

Advertisment

இது தொடர்பான புகாரை, பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், முன்னாள் மாணவர்கள் முதலாமாண்டு தேர்வில் எழுதிய விடைத்தாள்களின் நகலை எடுத்து சரி பார்த்துள்ளார். அதில், ஜெய் ஸ்ரீ ராம் என்றும், ஜெய் ஹனுமான் என்றும், கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா என்ற வார்த்தைகளை மட்டும் எழுதிவிடைத்தாள்களை நிரப்பியுள்ளனர். அந்த விடைத்தாள்களுக்கு 56% மதிப்பெண்களை ஆசிரியர்கள் மூலம் பெற்றுள்ளனர்.

Advertisment

இதில் அதிர்ச்சியடைந்த மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், இந்த விடைத்தாள்களை முறைப்படி மீண்டும் திருத்த சொன்ன போது, அதில் அனைவருக்கும் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனையடுத்து, விடைத்தாள்களின் நகலையும், முறைப்படி திருத்தப்பட்ட விடைத்தாள்களையும் எடுத்து பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், இந்த முறைகேட்டில் 2 ஆசிரியர்களுக்குசம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. அதன் பேரில், மாணவர்களிடம் பணத்தைப் பெற்று கொண்டு அவர்களை தேர்ச்சி பெற வைத்த அந்த 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான், கிரிக்கெட் வீரர்கள் பெயரை மட்டுமே எழுதி வைத்த மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment